headlines

img

அந்திப் பொழுதில் ஒரு அளவளாவல்..! - செல்வகதிரவன்

பகல் பொழுது விடைபெற்று, இரவை வரவேற்கக் காத்திருக்கும் அந்தி வேளை. குண்டுராயர் தெருக் கடை வீதி சுறுசுறுப்பாக இயங்கியது. ஜவுளிக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மொபைல் சென்டர், வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனை மையம் இத்தியாதிக் கடைகள் கலகலப்பாக காட்சி அளித்தன.  நடுத்தர வயதுப் பெண்மணிகள், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் முதலியோர் ‘சாப்பிங்’ செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கடை வீதிக் கடைகளில் ஓகோவெனக் கூற முடியாவிட்டாலும் ஓரளவிற்கு வியாபாரங்கள் நடந்தன.  குண்டுராயர் தெருக் கடைவீதியின் தொடக்கப் பகுதியில் இருப்பது சந்திரசேகர் ஜவுளிக் கடை. உதவிக்கு ஒருவரும் இல்லாமல் கடை ஓனரான சந்திரசேகர் மட்டுமே விற்பனையைக் கவனித்துக் கொள்ளும் சின்னஞ் சிறு கடை இது.  பொதுவாக சந்திரசேகரின் கடையின் வாடிக்கையாளர்கள் கிராமத்து ஜனங்கள். அந்த நகரை ஒட்டியுள்ள  கொன்னக்குளம், உடைகுளம், கல்குரிச்சி போன்ற கிராமங்களில் இருந்து வருவார்கள்.  அவர்கள் பகல் நேரத்தில் வந்து, தேவையானவற்றை வாங்கிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள். எனவே மாலையில் பெரும்பாலும் சந்திரசேகர் ஜவுளிக் கடையில் அதிகமாக வாடிக்கையாளர்களைக் காண முடியாது. அதனால் நண்பர்களுடன் கலந்துரையாடுவதிலேயே நேரத்தைப் போக்குவார் நமது சந்திரசேகர்.  பரணீதரன், அரசாங்க அலுவலகம் ஒன்றில் அலுவலராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். பரணீதரன் ஓய்வு பெற்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. இந்த ஐந்து வருடங்களில் நாள்தோறும் மாலையில் ஒரு மணி நேரம் நூலகத்தில் பொழுதைக் கழிப்பார். அதன் பிறகு ஆறு மணி வாக்கில் சந்திரசேகருடன் அளவளாவ வந்து விடுவார்.  சந்திரகேசரும் பரணீதரனின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார். 

சந்திரசேகர் - பரணீதரன் இருவரும் கல்லூரி காலத் தோழர்கள். கல்லூரி முடித்து, சில நாட்களில் அரசு பணி கிடைத்த பரணீதரன் அரசாங்க ஊழியராகி விட்டார். அரைக் காசு உத்யோகம் என்றாலும்… அரசாங்க உத்தியோகமே மேல் என்று தெரியாமலா சொன்னார்கள்…? அரசாங்க வேலையை அடிமைச் சேவகமாக கருதினார் சந்திரசேகரின் அப்பா. ‘முப்பது நாள் முழுவதும் வேலை பார்த்து வாங்கும் சம்பளத்தை மூன்று தினங்களில் வியாபாரத்தில் லாபமாக சம்பாதித்து விடலாம்… சில வியாபார நுணுக்கங்களை மட்டும் கற்றுக் கொண்டால் போதும்.. அது மட்டுமல்ல, அங்க ஆபீஸருக்கு வளைஞ்சு கொடுக்கணும்.. கெட்டவனப் புகழணும்.. நல்லவனக் கண்டுக்கிடாம விடணும்…  சமயத்தில காட்டிக் கொடுக்கணும்… பிடிக்கிதோ பிடிக்கலையோ முக்கியமான ஆட்களுக்கு சலாம் போடணும்… வியாபாரத்தில் யாருக்கும் தலை வணங்கத் தேவையில்லை… நீயே ராஜா… நீயே மந்திரி…” அப்பா சொன்ன அறிவுரையை வேத வாக்காகக் கருதி வியாபாரத்தில் இறங்கி விட்டார் சந்திரசேகர். பின்னர் அதற்காக வருந்தியது தனிக்கதை. கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய இவர்கள், வாழ்க்கையில் வேறுவேறு திசைகளில் பயணப்பட்டார்கள். அரசாங்க வேலையில் சேர்ந்த பரணீதரன், பணி நிமித்தம் பல நகரங்களுக்கு மாறுதலில் போனார். அப்பா சொற்படி ஜவுளிக் கடை ஆரம்பித்த சந்திரசேகர் உள்ளூரிலேயே செட்டிலாகி விட்டார். எப்பொழுதாவது முக்கிய நிகழ்வுகளில் மட்டும் சந்தித்து நலம் விசாரித்துக் கொள்ளும் வகையிலேயே  நண்பர்களின் நிலமை மாறியது. தொடர்பில் நீணடதொரு இடைவெளி ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை. 

காலங்கள் றெக்கை கட்டிப் பறக்க…  பரணீதரன் பணி நிறைவு பெற்று உள்ளுர் வந்தார். இளம் பருவத்தில் மலர்ந்த இருவரின் நட்பு, இன்று தாத்தாக்கள் ஆன பிறகு புதிப்பிக்கப்பட்டு, தினந்தோறும் சந்தித்து உரையாடுகின்ற வாய்ப்பைப் பெற்றது. சந்திரசேகர் சந்தித்த பிரச்சனைகள், அனுபவங்கள், வணிக நடைமுறைகள், யோசிப்புக்கள் ஆகியன அவரை ஆன்மிகப் பற்றாளராக்கியது. அதுமட்டுமின்றி வலதுசாரி சிந்தனையாளராக, அரசியல் ஆர்வலராக, பழைமை ஆதரவு மனப்போக்கு மிக்கவராக மாற்றிவிட்டது.  பரணீதரனின் அலுவலகச் சூழல், அதிகாரிகளின் கெடுபிடி, செய்யும் பணிகளில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீடு, தொழிற்சங்க ஈடுபாடு, அரசியல் ஆர்வம், பொதுஜனத் தொடர்பு, சமூக அக்கறை, புத்தக வாசிப்பு இத்தியாதிகள் இவரை இடது மனதுக்காரராக உருவாக்கி இருந்தது.  முப்பது வருடங்கள் முடிந்து, மீண்டும் நட்பை; தொடர்கிற வேளையில் இரண்டு பேரும் எதிரெதிர் முனையில் நின்றார்கள். இருந்த போதிலும் அன்பு என்கிற பிணைப்பு இந்த நண்பர்களை தினந்தோறும் சந்திக்கச் செய்து மணிக்கணக்கில் மனம் திறந்து பேச வைத்தது.  கடைக்குள் நுழைந்து சந்திரசேகரின் எதிரில் அமர்ந்து உரையாட ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலே… சந்திரசேகரின் பேச்சுக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்க வேண்டிய நிலமையே அமையும். ஆம். இடதுசாரி மனோபாவம் மிக்க பரணீதரனால் இந்துத்துவா ஆதரவு, பெரியார் எதிர்ப்பு, கம்யூனிஸ்ட் வெறுப்பு போன்றவற்றை கேட்டுவிட்டு அமைதி காக்க முடியுமா…?

எதிர்கருத்துச் சொல்வதால் எந்தவிதமான டென்சனும் அடையமாட்டார் பரணீதரன்.  தொலைக்காட்சிகளில் வாக்குவாதம் நடைபெறுவது மாதிரி, ஏட்டிக்குப் போட்டியாக குறுக்கிடாமல் உரிய விளக்கங்களை மெல்லிய குரலில் வெளிப்படுத்துவார் பரணீதரன். பரணீதரனின் தெளிவான பதில் சந்திரசேகரை யோசிக்க வைக்கும். முழுமையாக இல்லாவிட்டாலும் முக்கால்வாசி அளவில் பரணீதரனின் அபிப்ராயங்களை ஏற்க வைக்கும். தொடர்கதை போல் சுவராசியமான இந்தக் கருத்துப் பரிமாற்றம் தொய்வின்றி தொடர்ந்தது.  அன்றும் அப்படித்தான்…. பரணீதரன் வழக்கம் போல் மாலை ஆறுமணிக்கு கடைக்குள் வந்தமர்ந்தார். பொதுவான சில சங்கதிகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அப்போது இரண்டு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்கள், கடையைக் கடந்து சென்றார்கள்.  அவர்களைப் பார்த்தவுடன் சந்திசேகரின் பேச்சு, ஓய்வூதியம் குறித்து உடனே தாவியது. 

“இந்தா போறாங்களே… ரெண்டு பேரு… இவுங்களோட மனைவிமார்களும் கவர்ண்மெண்ட் வேல பார்த்தவுங்க.. வேல பாக்கும் போது சரியான சம்பளம்.. இப்ப ரிடேயர் ஆன பிறகும்… ரெண்டு பேருக்கும் சேத்து நாற்பதாயிரம் ரூபாய் பென்சன் வருது… நாற்பதாயிரம் பென்சன் வாங்கி… ஆடம்பரச் செலவ செய்றாங்க… வேல பாக்கும் போது சம்பளம் கொடுத்தது சரிதான்… இப்ப ரிடேயர் ஆன பெறகு பென்சன் அவசியமா..? இப்பிடி அள்ளிக் கொடுத்தா கவர்ண்மெண்ட்டு பணத்துக்கு என்ன செய்யும்…? டாஸ்மாக்க நம்பித்தான் கவர்ண்மெண்ட்ட ஓட்ட முடியும்…” “சேகர்… ஒங்களுக்கு தெரிஞ்ச ரெண்டு பேரு பென்சன வாங்கி ஆடம்பரச் செலவு செய்றாங்க… அதுக்காக பென்சனே யாருக்கும் தரக் கூடாதுன்னு சொல்றது சரி இல்ல… நாட்டுல ரெம்பப் பேரு நகைச் சுவையா ஒண்ணு சொல்லுவாங்க… பெண்ணும் கைவிட்டுட்டா… சன்னும் கவனிக்காம விட்டுட்டான்.. பென்சன் பணந்தான் கைகொடுக்கிது… இதுல எவ்வளவு உண்மை இருக்குத் தெரியுமா…?” “சொல்லுங்க..” “இந்தக் காலத்தில பையன்க படிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு… சென்னை, பெங்களூர்னு வேலைக்குப் போயிடுராங்க… பெத்தவுங்க சென்னையில பெங்களூர்ல இருக்க முடியாது.. அந்த மாநகர வாழ்க்க அவுங்களுக்க ஒத்து வராது… அவுங்க வாங்கிற பென்சன வச்சு உள்ளூர்ல நிம்மதியா வாழ்றாங்க…

அந்தப் பென்சன நிறுத்திட்டா அவுங்க வாழ்க்க எப்பிடி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சப் பாருங்க…” “ம்…” “சில பேருக்கு மகன் இல்லாம மகள்கள் மட்டுமே இருப்பாங்க… மகள கல்யாணம் பண்ணிக் கொடுத்த பெறகு அவுங்க வீட்டுல போயி நெரந்தரமா இருக்க பெத்தவுங்களோட சுயமரியாத இடம் தருமா..?” “இல்ல பரணீ… கணவனும் மனைவியும் வேல பாக்கும் போது சம்பளம் வாங்கிறது சரி… ரிடேயர் ஆன பெறகு கணவருக்கு மட்டும் பென்சன் தந்தாப் போதாதா..?” “ஆணும் பெண்ணும் சரின்னு பேசிட்டு… பெண்ணுக்கு மட்டும் பென்சனக் கட் பண்றது எந்த வகையில நியாயம்..? அப்படி செய்யிற தைர்யம் எந்த அரசாங்கத்துக்காவது வருமா…?  ரெம்ப வீடுகள்ல கணவன் பணியில இருக்கும் போது இறந்திடுவாரு… பள்ளிக் கூடத்தில காலேஜ்ல படிக்கிற பிள்ளைங்க இருக்கும்… கணவனை இழந்த அந்தப் பெண்மணி பென்சன் இல்லைன்னா என்ன பண்ணுவா…?”

“அப்பிடிப்பட்டவுங்களுக்க மட்டும் பென்சன் தரலாமே…” “இன்னக்கி இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மத்த கட்சிகள் வசதியானவுங்களத்தான் எம்.பி., எம்.எல்.ஏ. எலக்சன்ல வேட்பாளரா நிறத்துராங்க… அவுங்க ஜெயிச்சு… எம்.பி. எம்.எல்.ஏ. சம்பளம் வாங்குராங்க… பதவி காலம் முடிஞ்ச பெறகு பென்சனும் வாங்குராங்க… அப்பிடி இருக்கும் போது… முப்பது வருசம் ஒழைச்ச ஏழை ஊழியர்களுக்கு தர்ற பென்சன் அனாவசியம்னு சொல்ல முடியுமா..?” “என்னோட மனசாட்சி சொல்லுச்சு… அதான் சொன்னேன்…” “அதே மனச்சாட்சியத் தொட்டுச் சொல்லுங்க… நீங்க கடவுள் நம்பிக்க உள்ளவர்தானே..” “ஆமாம்…”

“அந்தக் கடவுள் உங்க நிலையைச் சரின்னு ஆமோதிப்பாரா..? பென்சன் அனாவசியமான ஒண்ணுன்னு நெனப்பாரா..? கொடுக்கிற பென்சன ஒடனே நிறுத்தணும்ன கருதுவாரா…? பென்சன் பணத்தில நிம்மதியா கடேசி கால வாழ்க்கையை ஓட்டும் தனது பக்தர்கள் சிரமப்பட விரும்புவாரா…?” கடவுளை சம்மந்தப்படுத்தி அடுக்கடுக்காக கேள்வியைக் கேட்கவும் சந்திரசேகர் பதறிவிட்டார். கடவுள் அப்படியெல்லாம் நினைக்க மாட்டார் என்றார். கடவுளே பென்சன் அனாவசியம்னு நெனைக்காத போது அவரின் பக்தர் நீங்க நினைக்கலாமா…? என்கிற பரணீதரனின் கேள்விகளுக்கு சேகரால் பதில் சொல்ல முடியவில்லை. “இதற்கு மேலும் நண்பரை திணறடிக்க வேண்டாம்” என்ற எண்ணத்தில் “நேரமாச்சு நாளை பாக்கலாம் சேகர்” என்று விடை பெற்றார் பரணீதரன். ‘கடவுள் பக்தரைக் காப்பாற்றுகின்றாரோ இல்லையோ… பக்தர் கடவுளைக் காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாய் திகழ்கிறார் என்பதை அறிந்தார் பரணீதரன்.

;