headlines

img

வாக்கின் வலிமை பேசும் ஒரு விரல் புரட்சி - வாக்கின் வலிமை பேசும் ஒரு விரல் புரட்சி

புத்தக மேசை

2019 மக்களவைத் தேர்தலின் போது குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டில் அருணன் எழுதிய 'ஒரு விரல் புரட்சி' எனும் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அது தற்போது நூலாக தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 34 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள இந்த நூலில் இதுவரை இந்திய ஜனநாயக வரலாற்றில் நடைபெற்ற நாடாளுமன்ற, தமிழக சட்டமன்ற தேர்தல்கள் குறித்த கண்ணோட்டம் சுருக்கமாகவும், சுவை யாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. தேர்தலைத் திருவிழா என்பார்கள். அந்தத் திருவிழாவில் பல சமயங்களில் உண்மை தொலைந்து அநாதைக் குழந்தைபோல அலைந்து கொண்டிருக்கும். பொதுச் சமூகத்திற்கு மறதி அதிகம். இந்த மறதி தான் பலருக்கு முதலீடாக இருக்கும். வரலாற்றை வாசிப்பதும் நினைவுபடுத்து வதும்  வரலாற்று ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர் அருணன் அந்தக்கடமையை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார். 

அனைவருக்கும் வாக்குரிமை என்பது இன்றைக்கு நடைமுறைச் சாத்தியமாகி இருக்கிறது என்றால் அந்த உரிமை கடந்து வந்த பாதை மிகவும் நெடியது. குட வோலை முறை குறித்து இன்றைக்கும் வியந்தோதுபவர்கள் உண்டு. அன்றைய சூழலில் அது மேம்பட்ட ஒன்றுதான். ஆனால் நிலவுடமையாளர்களும், வேதம் தெரிந்த உயர் பிரிவினருமே அந்த உரிமையைப் பெற்றிருந்தனர் என்பதை மறந்துவிடலாகாது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது ஐரோப்பிய கண்டுபிடிப்பாக இருந்த போதும் அந்த நாடுகளில் பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் 1950லேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது என்பது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய செய்தி அல்ல. அதேபோல ரிசர்வ் தொகுதி ஏற்பாடு என்பதும் மிக முக்கிய மான ஒன்று.  1950ல் இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்டு 1951-52ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் துவங்கி 2019 மக்கள வைத் தேர்தல் வரையிலான அனைத்து தேர்தல்கள் குறித்தும் விரிவான தகவல்களை தொகுத்துத் தந்துள்ளதோடு அரசியல் நிகழ்ச்சிப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் சுவையாக விவரிக்கிறார் பேராசிரியர் அருணன்.  முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 45 விழுக்காடு. ஆனால் பெற்ற இடங்கள் 75 விழுக்காடு. இந்த சமமற்ற நிலை இன்றளவும் தொடர்கிறது. தேர்தலில் காலத்திற்கேற்ற சீர்திருத்தம் குறிப்பாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை என்பதை கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

முதல் பொதுத் தேர்தல் நடைபெறுவ தற்குக் காரணமான  அரசியல் சாசனத்தை வடிவமைத்துத் தந்தவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால் முதல் தேர்தலிலேயே அவர் தோற்கடிக்க ப்பட்டார் என்பது விசித்திரமானதும் அதே நேரத்தில் விபரீதமானதும் ஆகும். முதல் பொதுத் தேர்தலில் பாஜகவின் பூர்வீக மான ஜனசங்கம் பெற்ற வாக்குகள் 3 விழுக்காடு. அது பெற்ற இடங்கள் 3 மட்டுமே.  இன்றைக்கு இந்த நிலைக்கு பாஜக வந்துள்ளதற்கான காரணத்தை இந்த நூல் விளக்குகிறது. இந்தத் தேர்தல் அரசியலைப் புரிந்துகொள்ளாமல் இந்திய பாசிஸ்டுகளான பாஜகவை புரிந்துகொள்ள முடியாது.  அன்றைய ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 325 இடங்களில் காங்கிரஸ் பெற்றது 152 இடங்கள்தான். எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’ உருவாக்கி 166 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் தந்தபோதும், அதை ஏற்க மறுத்த ஆளுநர், காங்கி ரசை ஆட்சியமைக்க அழைத்தார். கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி முதல்வர் நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டார். அந்த அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்பதெல்லாம் சுவையான நிகழ்வுகள் மட்டுமல்ல இன்று பாஜக நடத்தும் தகிடு தாள வேலைகளுக்கு முன்னோட்டமாக வும் அமைந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக சட்டமன்றத் தேர்த லிலும் நிகழ்ந்த திருப்பங்கள். உருண்ட மணிமுடிகள், முகிழ்த்த ஆட்சிகள், வீழ்ந்த தலைவர்கள் என ஒரு நாவல் போல தேர்தல் அரசியலை சொல்லிச் செல்கிறது இந்த நூல்.  தமிழக அரசியலைப் பொறுத்தவரை தேர்தலில் பங்கேற்பது என அன்றைய திமுக எடுத்த முடிவு ஒரு முக்கியத்தி ருப்பம். திமுக தேர்தலில் பங்கேற்க வேண்டுமா என்பதை மாநாட்டில் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்க ப்பட்டது என்பது ஒரு சுவையான செய்தி.  நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட எம்ஜிஆரின் திரைப்படம் தேர்த லில் ஏற்படுத்திய தாக்கம் ரூபாய்க்கு 3 படி லட்சியம் ஒருபடி நிச்சயம் என்ற அண்ணா வின் வாக்குறுதி, எஸ்.எஸ்.ஆருக்கு ஏற்பட்ட வயிறுக் கோளாறால் வந்தத் தேர்தல் என ஏராளமான தகவல்கள் அதற்குரிய காலப்பின்னணியோடு விவரிக்கப்பட்டுள்ளது.  தற்போது பாஜகவுக்கு தேர்தல் களத்தில் ராமர்தான் பல நேரங்களில் கைகொடுத்து வருகிறார். ஆனால் 1971 தேர்தலில் தமிழகத் தேர்தல் களத்தில் பெரும் விவாதப்பொருளாக ராமர் மாற்றப்பட்டதும், அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்கள் திரைப்படங்கள் குறித்து சவால் விட்டுப் பேசியதும் இன்றைய தலைமுறை அறிய வேண்டிய செய்தி.  தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்ததால் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை எனும் இருண்ட காலம், அதை அடுத்து வந்த தேர்தலில் அவர் அடைந்த படுதோல்வி போன்றவை இன்றைய ஆட்சியாளர்க ளுக்கும் பாடமாக இருக்கும். 

மண்டலா, கமண்டலா என அரசியல் களம் சமூக நீதிக்கான சமர்க்களமாக மாற்றப்பட்ட வரலாறும் தேர்தல் களத்தில் சமூக நீதியின் குரல் ஓங்கியும் மங்கியும் மாறி மாறி ஒலித்த சம்பவங்களையும் அறிகிறபோதுதான் சமூக நீதியைப் பாதுகாத்து நிற்க முடியும்.  ஒரு இடதுசாரி அரசியல் ஆய்வாள ரான தோழர் அருணன், தகவல்களைத் தரும் போது நேர்மையோடும் அது குறித்த கணிப்பை முன்வைக்கும் போது தன் சார்பு நிலைக்கு ஏற்பவும் கருத்திடு கிறார். நிறைவாகத் தேர்தல் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறார்.  மொத்தத்தில் இந்தியா சந்தித்து வந்துள்ள தேர்தல் குறித்த ஒரு பருந்து பார்வையை இந்த நூல் முன்வைக்கிறது. அதே நேரத்தில் கொத்த வேண்டியதை கொத்தியிருக்கிறது. 

ஒருவிரல் புரட்சி
வெளியீடு : வசந்தம் வெளியீட்டகம் 
69/24 ஏ, அனுமார் கோவில் படித்துறை
சிம்மக்கல், மதுரை-625 001
பக்: 200   விலை: ரூ.150/-

 

;