headlines

img

அசாதாரண மனிதர்களின் எல்லைகளைப் புரிந்துகொள்வதற்கான ஓர் உரையாடல்... - ஜி.செல்வா.

பேராசிரியர் சுந்தர் சருக்கை நூலென்றதும் சிந்தனையைத் தூண்டும் கருத்தாழமிக்க தத்துவக் கட்டுரைகளோ என நினைத்து அட்டைப் பக்கத்தை பார்த்தால் ஆச்சரியம். புத்தகத்தை புரட்டத் தொடங்கியதும்  மொழிபெயர்ப்பாளர் சீனிவாச ராமானுஜன் எழுதிய முதல் வரி கண்ணில் பட்டது.  “ஒரு தத்துவவியலாளராக எனக்கு அறிமுகமான பேரா சிரியர் சுந்தர் சருக்கை  நாடகக் கலையோடு நெருங்கிய உறவு கொண்டிருப்பார் என்று கனவிலும் நான் நினைத்துப் பார்த்தது கிடை யாது” என அவர் எழுதியிருந்தார்.  அதிகார வர்க்கத்தின் இசைவுக்கு ஏற்றாற்போல் கட்டமைக்கப்படும் பொதுச்சமூக உளவியலைத் தர்க்க ரீதியான உரையாடலுக்கு உட்படுத்தி புதிய திறப்புகளை வெளிப்படுத்தும் எழுத்துக்கு சொந்தக்காரர் பேராசிரியர் சுந்தர் சருக்கை. “இரண்டு தந்தையர்”  நாடகப்பிரதி வழி விமர்சன விழிப்புணர்வற்று  ஆளுமைகளை பிம்பங்களாக்கி, வழிபட்டு கொண்டிருப்பவர்களி டம் உரத்தசிந்தனைக்கான ஓர் உரையாடலை உருவாக்கியுள்ளார்.  இத்தகு சிந்தனைத் தெரிப்புகளுக்காக நூலாசிரியர் எடுத்துக்கொண்ட களமும் தளமும் அவரது ஆளுமை எல்லையின் விரிவைப் பறைசாற்றுகின்றன. 

மேதைகளும் புனிதர்களும் மீண்டும் சாலை களில் மனிதர்களாக நடமாடுகிறார்கள். அவர்களின் தத்துவ, கணித, அறிவியல் சாதனைகளின் ஊடே வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட -  மறுக்கப்பட்ட- கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இருள்வெளிக்குள் ஒளி பாய்ச்சப்படுகிறது. உன்னதங்கள் உரையாடலாக மாற்றப்படுகின்றன. இதைக் கேட்டு கடக்கும் வாசகமனம் தன்னை ஆசுவாசப்படுத்தி மனிதத்தன்மை குறித்த ஒரு புரிதலுக்கு வர முயல்கிறது. “ஹார்டியின் நியாயப்பாடு”  ஆறு காட்சிகளாக செதுக்கப்பட்ட நாடகப்பிரதி. கணித மேதை ராமானுஜம்,  அம்மேதமையைக் கண்ட டைந்த பேராசிரியர் ஹார்டி,  ராமானுஜத்தின் தாயார் கோமளத்தம்மாள், இணையர் ஜானகி ஆகியோர் பேசுகின்றனர். 

அவர்களின் பேசுபொருள்கள் தங்களுக்கிடை யில்  நடத்தும் உரையாடல்கள்,  “வரலாற்று நூல்களில் அடைக்கப்பட்டிருந்த சூத்திரங்களை” விடுவித்து அவரவர்களின்  நியாயங்களோடு அவர்களுடன் பார்வையாளர்களை அளவளாவ விடுகிறது. “ஐன்ஸ்டீன் நிச்சயமாக சாதாரண மனிதர் அல்ல. ஆனால் அசாதாரண மனிதராக இருப்பதற்கும் படைப்பாற்றலோடு இருப்ப தற்கும் ஒருவர் ஏதேனும் விலைகொடுக்க வேண்டி யுள்ளதா?” இக்கேள்வியை எழப்பி “சாதாரண மனிதர் அல்ல” நாடகப்பிரதி வழி, தனது தேடலை நடத்தியுள்ளார் பேராசிரியர் சுந்தர் சருக்கை. ஜிப்ஸி பெண்மணி லூபிகாவுடன் ஐன்ஸ்டீன் முன்வைக்கும் தன்தரப்பு வாதங்களை, நியாயங்களை கேட்கும் வாசகமனது அவரின் துயரில் பங்கேற்க விரும்புகிறது. ஆனால் ஐன்ஸ்டீன் பார்க்கமறுத்த அவரது குழந்தைக்காக லூபிகா எழுப்பும் கேள்விகள் அசாதாரண மனிதர்க ளின் எல்லைகளைப் புரிந்து கொள்ளப் பயிற்சிய ளிக்கிறது.

நிஐவாழ்வில் சந்தித்துக்கொள்ளாத காந்தியும் ஐன்ஸ்டீனும் “இரண்டு தந்தையர்” நாடகத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். பிரபஞ்சத்தின் புதிரை விடுவித்த ஐன்ஸ்டீனுடன் காந்தியின் மகன் நடத்தும் உரையாடல், சத்தியத்தைப் பரிசோதனை க்கு உட்படுத்திக் கொண்டவராக சொல்லும் காந்தி யிடம்  ஐன்ஸ்டீன் மகள் எழுப்பும் கேள்விகள் இதற்கு ‘தந்தையர்’ அளிக்க முயலும் விடைகள், ‘தந்தையர்’ தங்களுக்கிடையில் சந்தித்து உரையாடுவதாக நாடகக் கட்டமைப்பு உள்ளது. நாடகத்தின் தொடக்கத்தில் பார்வையாளர்க ளாக வருபவர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் காந்தி அறைகளில்  தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். சில கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால் நாடகப் பிரதியின் இறுதியில் பார்வையாளர்கள் கண்டடைந்த ரசவாதத்தை பேசிக்கொள்ளவில்லை.

பேசாமலேயே நிறைந்து நிற்கும் மவுனத்தில் வாசகன் பயணிக்க வழிவிடப்பட்டுள்ளது.
 

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
 

என கவிதை பாடியிருந்தார் பிரமிள். அந்தக் கவிதையின் உள்ளார்ந்த பொருளை மூன்று மேதைகளின் வாழ்விலிருந்து சுந்தர் சருக்கை  எழுதிபார்த்துள்ளாரோ எனத் தோன்றியது.  நாடகப்பிரதி, நாடகங்கள் குறித்து இந்நூலை மொழியாக்கம் செய்த சீனிவாச ராமானுஜம் எழுதியுள்ள குறிப்பு கவனிக்கத்தக்கது.  “ஒரு நாடக பிரதிக்கு ‘அப்பால்’ உள்ள உபரிதான் அதனைப் பலவிதமாக அர்த்த ப்படுத்தவும் பலவிதமாக நிகழ்த்தவும் உந்துகிறது.  இந்த உபரி  இல்லையென்றால்,  நாம் அந்த நாடகத்தை நிகழ்த்த முடியாது. 'மேடை யாக்கம்' பெறுவதெல்லாம் நிகழ்த்துதல் ஆகாது. அதாவது நிகழ்த்துவதற்கான பிரதியில் உள்ள உபரியைக் கண்டெடுக்க கண்டெடுக்கத்தான் அது மூலமாக, ஒரு நாடகப் பிரதியாகப் பரிணமிக்கிறது. .. .. நமக்கு நாடகப் பிரதிகள் தேவை. நமக்கான பிரதிகளை நாம் அடையாளம் காண வேண்டி யுள்ளது. இவ்வாறு கண்டெடுக்கப்படும் நாடகங்களை ‘நிகழ்த்துவது’ சாத்தியப்படாமல் போனாலும், அதனளவில் அதன் இருப்பு மிக முக்கியமானது”.  ஆம், பேராசிரியர் சுந்தர் சருக்கை எழுதியுள்ள நாடகப் பிரதி நமக்கானது.நமக்கான நாடகப் பிரதியை மொழியாக்கம் என்ற உணர்வே வெளிப்படாமல் எழுத்தாக்கம் செய்த சீனிவாச ராமானுஜம், வெளியிட்ட பரிசல் செந்தில்நாதன் ஆகியோர் நமது போற்றுதல்களுக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.

இரண்டு தந்தையர்
(நாடகங்கள்)
ஆசிரியர்: சுந்தர் சருக்கை
தமிழில்:  சீனிவாச ராமாஜம்
வெளியீடு:  பரிசல் புத்தக நிலையம்
216, முதல் தளம்,  திருவல்லிக்கேணி
சென்னை - 600 005
தொடர்புக்கு : 93828 53646

;