headlines

img

கல்விக்கொள்கையின் இலக்கு எது?

மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டங்கள், வேளாண் திருத்தச்சட்டங்கள், தொழிலாளர் நல திருத்தச் சட்டங்கள்என எதையும் கைவிட மோடி அரசு தயாராகயில்லை என்பது மட்டுமல்ல, அந்தச் சட்டங்களைத் தொடர்ந்து நியாயப்படுத்தியும் பிரதமர் மோடி பேசி வருகிறார். நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்படாமலும் மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டறியாமலும் அராஜகமாக திணிக்கப்பட்ட ஒன்றுதான் புதிய கல்விக் கொள்கை. 
பெரும் பகுதி மக்களுக்கு கல்வி உரிமையை  மறுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள்தான் இவை. ஆனால் பிரதமர் மோடி இந்த சட்டங்களையும் தொடர்ந்து நியாயப்படுத்தி வருவதோடு, நடைமுறைப்படுத்தவும் துடித்து வருகிறார்.

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் தேசியகருத்தரங்கில் பேசிய அவர், அம்பேத்கர் காட்டிய பாதையில் நமது நாடு நடைபோடுவதை உறுதி செய்யவேண்டியது நமது கல்வி அமைப்பின் தலையாய கடமை என்றும் இதற்காகவே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.மத்திய பாஜக கூட்டணி அரசு அம்பேத்கர் வழியில் நின்று புதியக் கொள்கையை உருவாக்கவில்லை. மாறாக குலக்கல்வி முறையையும், சனாதன தொழில் முறையையும் வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதல் படியே உருவாக்கியுள்ளது என்பது தெளிவு.

கல்வியை மானுட விடுதலையின் ஒரு பகுதியாகவே பாபாசாகேப் அம்பேத்கர் பார்த்தார். “ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையில் படிப்பினையை கற்பித்து தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னுடைய  உரிமைகளுக்காக போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி” என்பதே அவருடைய கருத்து.மதக்கோட்பாடுகளுக்கு பாடத்திட்டத்தில் இடமில்லை என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். ஆனால் மோடி அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக்கொள்கை அறிவியலையும், பகுத்தறிவையும் பின்னுக்குத் தள்ளி மூட நம்பிக்கைகளை முன்னிறுத்துவதாகவே அமைந்துள்ளது. 

அதுமட்டுமன்றி, தகுதி, தரம் என்ற பெயரில் பெரும்பகுதி மாணவர்களுக்கு கல்வியை மறுப்பதேமத்திய ஆட்சியாளர்களின் நோக்கம். தேர்வுகள் என்ற பெயரில் மாணவர்களை அச்சுறுத்தி இடைநிற்றலை அதிகரிக்கும் வகையிலேயே இந்தக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை வடிகட்டி ஒரு பிரிவினரை உயர்நிலைக்கல்விக்குஅனுப்புவது மற்றவர்களை சுயதொழில் என்கிறபெயரில் குலத் தொழிலில் தள்ளுவது இவர்களது நோக்கம். மாநில உரிமைகளை காலில் போட்டு மிதித்துஇந்தி, சமஸ்கிருத திணிப்பு, கல்வியை முற்றிலுமாக மத்திய பட்டியலுக்கு கொண்டு போவது எனமுற்றிலும் கல்வி விரோதமாக உருவாக்கப்பட்டதே மோடி அரசின் கல்விக்கொள்கை. கார்ப்பரேட்டுகளுக்கு கைகட்டி சேவகம் செய்யும் பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்தையும் உள்ளடக்கியஇந்தக் கொள்கைக்கு அம்பேத்கரை துணைக்குஅழைப்பது ஏமாற்று வேலை. இந்த கல்விக் கொள்கைக்கு எதிரான கிளர்ச்சியை கூர்மைப்படுத்துவதன் மூலமே அனைவருக்கும் சமமானகல்வி என்பதை உறுதி செய்ய முடியும். 

;