headlines

img

மக்கள் குரலும்,  ‘மனதின்’ குரலும்....

கொரோனா தொற்றின் இரண்டாவது அலைஇந்தியாவையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றியுள்ள உரைநிலைமையின் தீவிரத்தை அவர் உணர்ந்ததாகவோ, அதற்கான தீர்வினை முன்வைப்பதாகவோ இல்லை. வழக்கம் போல வார்த்தைகளை அள்ளிவிட்டு நாட்டு மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று உபதேசம் செய்துள்ளார். 

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவர்கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு தயாரிப்பு தடுப்பூசி நிறுவனத்தை தொடர்ந்து கோவாக்சின் தயாரிப்புநிறுவனமும் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இரண்டு நிறுவனங்களுமே மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுகளுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒருவிலை என்று அறிவித்துள்ளன.தடுப்பூசி போடுவதில் மாநில அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியும் தொடர்ந்து கூறி வருகிறார். இதன்மூலம் தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கைவிரிக்கிறது. 

இதை விட கொடுமை, வயது வித்தியாசமின்றி மே 1ஆம் தேதி முதல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறித்தது. ஆனால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற கோட்பாட்டிலிருந்து விலகிவயதில் இளையவர்கள் தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டிய நிலையை மத்தியஅரசு ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதல் விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்துஉற்பத்தி நிறுவனங்களும், மத்திய அரசும் இணைந்து நடத்துகிற நாடகம் போலவே இது தோன்றுகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது,தனி மனித இடைவெளி போன்ற அறிவுரைகளையும் பிரதமர் வழங்கியுள்ளார்.மக்கள் இவற்றை பின்பற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆக்சிஜன் உள்ளிட்டஉயிர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட செய்யாமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவது சரிதானா? மக்களை அச்சத்தில் தள்ளி தடுப்பூசி நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு அரசே துணைபோவது சரிதானா? இந்த கேள்விகளுக்கு பிரதமரின் உரையில் பதில் இல்லை. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பகுதி நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதல் அலையின் போதுஅறிவிக்கப்பட்ட பல மாத ஊரடங்கிற்கு பிறகுமக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிற போது இரண்டாவது அலை அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அவர்களுக்கு பொருளாதாரரீதியாக நிவாரணம் அளிப்பது குறித்து தவறியும் கூட மனதின் குரல்எதுவும் பேசவில்லை. நாட்டு மக்களுக்கு இப்போதுதேவை வெறும் அறிவுரைகள் அல்ல, அச்சத்தின்பிடியிலிருந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை.

;