headlines

img

கூட்டாட்சியின் குரல்....

கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி இலவச தடுப்பூசித்திட்டத்தை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்குஅழுத்தம் அளிக்க வேண்டுமென பாஜக அல்லாத11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் ஒட்டுமொத்த பொறுப்பையும் மாநிலங்கள் மீது சுமத்துவது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைக்கு எதிரானதுஎன்று அந்தக் கடிதத்தில் கேரள முதல்வர் பினராயிவிஜயன் குறிப்பிட்டிருப்பதோடு, இந்த கடிதத்துடன்மாநிலங்களின் தடுப்பூசி தேவையை மதிப்பிடுவதும், தடுப்பூசிகளுக்கான உலகளாவிய ஒப்பந்த புள்ளிகளை வெளியிடுவது தொடர்பாக பிரதமர்மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தை 11 மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்துடன் பினராயி விஜயன் இணைத்துள்ளார்.கொரோனா தொற்றின் இரண்டாவது அலைஇந்தியாவையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. முதல் அலையின் போது தடுப்பூசி முழுமையாககண்டுபிடிக்கப்படவில்லை. முதல் அலை சற்று ஓய்ந்திருந்த நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதி செய்து பெரும் பகுதி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருந்தால் இரண்டாவதுஅலையின் கோரத்தாண்டவத்தை கணிசமாக தணித்திருக்க முடியும். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு தடுப்பூசி வழங்கும்திட்டத்தை மாநிலங்களின் தலையில் சுமத்தியதுமட்டுமல்ல, ஒரே ஊசிக்கு மூன்று வகையானவிலையை இரண்டு மருத்துவ நிறுவனங்கள்நிர்ணயிக்கவும் அனுமதித்தது.

தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் கூட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம்உள்ளிட்ட மாநிலங்களில் போதிய அளவு தடுப்பூசிகையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி முற்றிலுமாக தீர்ந்துவிட்ட நிலையில், ஜூன் 6ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசிடமிருந்து ஒதுக்கீடு வந்தபிறகுதான் தடுப்பூசி செலுத்தும் நிலை தமிழகத்தில் உள்ளது.
தளர்வில்லாத ஊரடங்கு மூலம் நோய் பரவல்குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக தடுப்பூசி வழங்குவதுதான் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகளின் முன்னுள்ளஒரே வழியாகும். ஒருபுறத்தில் தடுப்பூசி ஒதுக்குவதில் தட்டுப்பாடு, மறுபுறத்தில் மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை என இரட்டைச் சிக்கலில் மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.தடுப்பூசி விநியோகத்தில் மோடி அரசின் குளறுபடி குறித்து உச்சநீதிமன்றமும், பல்வேறு உயர்நீதிமன்றங்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்தப் பிரச்சனையில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்பதே மோடி அரசின் நிலைபாடாக உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசியை விரைவாக வழங்குவது மத்திய அரசின் பொறுப்பாகும். கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் கொள்ளைக்காக தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு அனுமதிக்கிறது. கேரள முதல்வரின் கடிதம் காலத்தின் குரலாக, கூட்டாட்சியின் குரலாக ஒலிக்கிறது. இதுஇந்தியாவின் குரலாக மாற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

;