headlines

img

மக்களுக்கு கிடைத்த வெற்றி....

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்தியஅரசே மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும் எனபிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. தடுப்பூசி கண்டறியப்பட்ட உடனேயே இந்த முடிவை மோடி அரசு எடுத்திருக்க வேண்டும். மாறாக தடுப்பூசி விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகளையும், குழப்பங்களையும் மோடி அரசு செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், இந்திய மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தடுப்பூசி போடுவது மாநிலங்களின் பொறுப்பு என்று கைகழுவி விடுவதிலேயே மோடி அரசு குறியாக இருந்தது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசு இலவச தடுப்பூசிக்கு பொறுப்பேற்க வேண்டுமென மாநிலங்கள் கூட்டாக வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த பின்னணியில்தான் நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதற்கான மருந்தைகொள்முதல் செய்து மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் மொத்த உற்பத்தியில் 75 சதவீதத்தை மத்திய அரசு மாநிலங்களுக்கு  கொள்முதல் செய்துவழங்கும் என்றும், 25 சதவீதம் தனியாருக்கு வழங்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதைஉறுதி செய்தால் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவையில்லை. இருந்தாலும் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாபத்திற்காகவே பிரதமர் இந்த சலுகையை வழங்கியுள்ளார். தடுப்பூசிக்கு மூன்று வகையான விலையை தீர்மானித்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன. இந்த அணுகுமுறையை  உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததோடு மத்திய அரசு ஏன்தலையிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியது. இத்தகைய அழுத்தங்களின் காரணமாகவே மோடிஅரசு வேறு வழியின்றி மக்கள் கருத்துக்கு அடிபணிந்துள்ளது.

பிரதமர் தன்னுடைய உரையில் சுகாதாரத்துறை மாநில அரசுகளின் பொறுப்பில்தான் உள்ளது என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுக்கலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் மத்தியஅரசை எதிர்பார்த்திருப்பது தேவையற்ற தாமதத்தையும், குழப்பத்தையுமே ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போட பதிவு செய்வது,சான்றிதழ் அளிப்பது போன்றவற்றை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருப்பது முற்றிலும் நியாயமான ஒன்று.கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க தடுப்பூசி பெரும் உதவியாக இருக்கும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசி வழங்குவதோடு போர்க்கால அடிப்படையில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

;