headlines

img

சிந்திக்காத செயலும் கெடும்....

இந்தியாவில் தொடர்ந்து வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இந்த வாரஇறுதியில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 5.98 சதவிகிதத்திலிருந்து 6.75 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற வேலையின்மை 5.1 சதவிகிதத்திலிருந்து 6.75 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. மறுபுறம் வேலையில் இருப்பவர்களின் ஊதியமும் சரிந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஜி20 நாடுகளிலேயே இந்தியாதான் பொருளாதார மீட்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் ஒன்றிய மோடி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. காரணம் இந்த இக்கட்டான காலத்திலும் ஒன்றிய அரசு பெட்ரோல் மீது 217 சதவிகிதமும், டீசல் மீது607 சதவிகிதம் வரையிலும் கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.  இதன் எதிரொலியாகப் போக்குவரத்து, மின்சாரம், எரிபொருட்கள் ஆகியவற்றின்விலையும் உயருகிறது. அதன் தொடர் விளைவாக  அனைத்து பொருட்களின் விலையும் மளமளவென உயர்ந்து நிற்கிறது.  இதனால்86 சதவிகித மக்கள் மளிகை மற்றும் காய்கறிகளுக்குக் கூடுதல் பணத்தைச் செலவிடும் நிலை உருவாகியிருக்கிறது என நுகர்வு ஆய்வு தெரிவிக்கிறது. 

உண்மையில்  பொருளாதார மீட்சி ஏற்பட வேண்டும் என்றால் மக்களின் வாங்கும் சக்தியும், பொதுசெலவினங்களுக்கான தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றிய அரசுவரி மீது வரி விதித்து மக்களின் வாங்கும் சக்தியைமேலும் குறைத்துக் கொண்டே வருகிறது. இது பொருளாதார மீட்சிக்கு மாறாக வீழ்ச்சியை நோக்கியே இட்டுச்செல்லும். அப்படி விதிக்கப்படும் கூடுதல் வரியும் சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாகச் செலவிடப்படுவதில்லை.உதாரணமாக 2020- 21 ஆம் நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது போடப்பட்ட செஸ் மற்றும் கலால் வரிகள் மூலம் ரூ.3.4 லட்சம்கோடி கிடைத்திருக்கிறது. இதில் பெரும் பகுதி பணம் இலவச தடுப்பூசிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிக்கு பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலும் 10 ஆயிரம் கோடி மட்டுமே இதுவரை செலவிடப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மீது போட்டப்பட்ட செஸ் வரியில் தடுப்பூசிக்குஒதுக்கிய பணம் எங்கே சென்றது என்பதைப் பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கிட வேண்டும்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தி முடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு முழுவதும் செலுத்த வேண்டும். ஆனால்  தற்பொழுது ஒரு நாளைக்குச் சராசரியாக 45 லட்சம்தான் செலுத்தப்படுகிறது. கொரோனா 3வது அலை வந்தால் இந்தியா  மிகப்பெரிய நெருக்கடியைச்  சந்திக்க வேண்டிய அபாயச் சூழல் உருவாகியிருக்கிறது.  இதுதான் மோடி அரசு கொரோனாவில் இருந்து மக்களைப்பாதுகாக்கும் லட்சணம். இதைத்தான் ‘சிந்திக்காத செயலும் கெடும்; பொய்யான அழகும் கெடும்’ என்றார் ஔவையார்.

;