headlines

img

மூன்றாவது அலையும், அலட்சிய நிலையும்....

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஜூலை 4ஆம் தேதி துவங்கியுள்ளதாக ஹைதராபாத் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், பிரபல இயற்பியல் அறிஞருமான விபின் ஸ்ரீ வத்சவா கூறியுள்ளார். எனினும் ஒன்றியஅரசோ, இந்திய மருத்துவ கவுன்சிலோ இதை உறுதி செய்யவில்லை.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம்தணிந்துள்ளதால், மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் துவங்கியுள்ளனர். எனினும் கொரோனா மூன்றாவது அலை குறித்து சர்வதேச நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலை பரவத் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது அலை ஏற்கெனவே துவங்கிவிட்டதாக நிபுணர் ஒருவர் கூறியுள்ளது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிபோடுவதன் மூலமே கொரோனா தொற்றிலிருந்துதப்ப முடியும். ஆனால் தடுப்பூசி செலுத்துவது தொடர்ந்து குறைந்து வருவது கவலையளிக்கக்கூடிய தாக உள்ளது. ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து சராசரியாக தினந்தோறும் போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கையில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது. 

ஜூன் 21 ஆம் தேதி முதல் 27 தேதி வரையிலானஒரு வாரத்தில் சராசரியாக 61.14 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 28 - ஜூலை 4 வரையிலான வாரத்தில் 41.92 லட்சம்தடுப்பூசி மட்டுமே போடப்படவுள்ளது. அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிபோடுவது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.1.54 கோடி டோஸ் தடுப்பூசி மருந்துகள் கையிருப்புஉள்ளதாகவும், மேலும் 63.84 லட்சம் டோஸ் தடுப்பூசிவழங்கப்பட இருப்பதாகவும் ஒன்றிய அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எத்தனை நாள் வரும்?தடுப்பூசி செலுத்தப்படுவது பல மடங்கு உயர்த்தப்பட வேண்டும். கொரோனா இரண்டாவது அலையை தமிழகஅரசு வெற்றிகரமாக சமாளித்து
வருகிறது. மக்களிடமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசி கிடைக்காததால் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

செங்கற்பட்டு, நீலகிரி உள்ளிட்ட பொதுத்துறை ஆலைகளில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து யோசிக்கக்கூட ஒன்றிய அரசு மறுக்கிறது. மாநில அரசுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க வேண்டுமானால் மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்துவது, மாநிலங்களுக்கு தேவையான நிதியுதவி மற்றும் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு தடையின்றி வழங்குவது போன்றவை அவசியமாகும். அதை விடுத்து ஒன்றிய அரசும் குறிப்பாக பிரதமர் மோடியும் தங்களுக்கு தாங்களே பாரட்டிதழ் வாசித்துக் கொள்வது நிலைமையை எதிர்கொள்ள உதவாது. மூன்றாவது அலையை விட தீவிரமாக எழ வேண்டும் தடுப்பூசி செலுத்தும் அலை.

;