headlines

img

சட்டத்தில் குறையில்லை; சட்டமே குறையானது....

புதிய வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங்தோமர் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியவேளாண் தொலைநோக்குப் பார்வை மாநாட்டில் பேசும்போது கூறியிருக்கிறார். அத்துடன் புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கங்களும் தவறிவிட்டன என்றும் குறை கூறியிருக்கிறார். 

மத்திய பாஜக அரசால் நாடாளுமன்றத்தின் நடைமுறைகளை மீறி விவாதம் நடத்தாமல் அவசர அவசரமாக மூன்று புதிய வேளாண் சட்டங்களும் மின்சார திருத்த சட்டமும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. அவற்றை எதிர்த்து நாட்டிலுள்ள விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். தலைநகர் தில்லிக்குள் செல்லும் சாலைகளின் வாயில்களில் விவசாயிகள் முற்றுகை மற்றும் பல்வேறு வகையிலான வடிவங்களில் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டம் தற்போது நூறாவது நாளைதாண்டிவிட்டது. அதன் நூறாவது நாளில்தான் மத்திய அமைச்சர் மேற்கண்டவாறு விவசாயிகள் சங்கங்களை குறைகூறி பேசியிருக்கிறார்.

சட்டத்தில் உள்ள குறை என்ன என்பதை கூறவிவசாயிகள் தவறிவிட்டதாக அமைச்சர் கூறுவது முற்றிலும் தவறானது. ஏனெனில் அந்த மூன்றுசட்டங்களுமே குறையுடையது; தவறானது. அதனால் அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பது தான் விவசாயிகளின் ஒற்றைக் கோரிக்கையாக மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ரொம்ப பெரிய மனது பண்ணி அந்த சட்டத்தில் குறைகள் இருந்தால் அதை  திருத்திக் கொள்வதாக அமைச்சர் கூறுவது முற்றிலும் தவறானது.

சட்டமே குறையுடையது என்னும்போது அதைமுழுவதுமாக கைவிட்டுவிட்டு விவசாயிகள் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் வேளாண் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று புதிய சட்டத்தைக் கொண்டுவர நாடாளுமன்ற ரீதியிலான, முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும். அவற்றையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்றே மத்திய அரசு சாதித்தும்வாதித்தும் பிடிவாதம் பிடித்தும் வருகிறது. 

மத்திய அரசின் சட்டங்களால் இந்திய விவசாயமே பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வசமாகிவிடும். அதனால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் அந்த நிறுவனங்களிடம் அடிமையாக நேரிடும் என்பதால்தான் இந்தச் சட்டங்களை கைவிட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி பனியிலும், மழையிலும், வெயிலிலும் தங்களது உடல்வாதையை பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கவுரவத்தைக் காக்க வேண்டும் என்பதற்கே மத்திய அரசு முன்னுரிமைஅளிக்கிறது என்று அமைச்சர் கூறுவது உண்மையானால் அந்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறுவதே சரியானது. சட்டங்களை திருத்துவது தீர்வாகாது.
 

;