headlines

img

நம்பிக்கை அளிக்கும் நவ கேரளத்தின் ஒளி....

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன்தலைமையிலான 24 பேர் கொண்ட அமைச்சரவையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக இப்போதுதான் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கூட்டணி மீண்டும் மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இடது ஜனநாயக முன்னணி அரசு சவால்களை சாதனையாக்கி, பல்வேறு திட்டங்களை மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றியதற்காக கேரளமக்கள் அளித்துள்ள அங்கீகாரமாகும் இது. 

புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் மக்கள் போராட்டங்களில் பங்கேற்றுஅனுபவம் பெற்றவர்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளில் பணியாற்றி  அங்கீகாரம் பெற்றவர்கள். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பினை அவர்கள் திறம்படநிறைவேற்றுவார்கள் என்பது உறுதி. பல்வேறு இயற்கை இடர்பாடுகளையும், அடுத்தடுத்த பெரு நோய் தொற்றுகளையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதில் முன்னின்றது இடது ஜனநாயக முன்னணி அரசு. குறிப்பாக நிபாவைரஸ், கொரோனா தொற்று போன்றவற்றைஎதிர்கொண்டு சமாளித்த விதத்தை உலகமேபாராட்டியது. புயல், மழை, வெள்ளம் என அடுத்தடுத்து வந்த இயற்கை இடர்பாடுகளின்போதும் மக்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளித்தது
பினராயி விஜயன் தலைமையிலான அரசு.

நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு அனைத்து வகையிலும் கேரள மாநிலத்தை, மக்களை வஞ்சித்தது. கேரளத்திற்கு உரியநிவாரண நிதியை, வரி நிலுவையை தர மறுத்தது.வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியையும் பெறவிடாமல் முட்டுக்கட்டை போட்டது. சபரிமலை பிரச்சனையை பூதாகரமாக்கி மக்களிடம் பிளவை உண்டாக்க முயன்றது. மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி இடது ஜனநாயக முன்னணி அரசின் நற்பெயரை கெடுக்க பல்வேறுஇழி முயற்சிகளை மேற்கொண்டது. இதன்மூலம் கேரளத்தில் காலூன்ற பாஜக முயன்றது. ஆனால்அதனிடமிருந்த ஒற்றை இடத்தையும் பறித்துஇடது ஜனநாயக முன்னணி பாடம் புகட்டியுள்ளது.

பினராயி விஜயன் தலைமையிலான அரசுபட்டியலினத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி சமூக நீதிக்கு வலிமை சேர்த்தது.தற்போது புதிய அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த கே.ராதாகிருஷ்ணனை இந்து அறநிலையத் துறை அமைச்சராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்போது புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள், இடம் பெறாதவர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குஎதிராக  அவதூறுகளை சிலர் அள்ளி வீசுகின்றனர்.இவர்களில் பலர் கம்யூனிஸ்ட்டுகளை எப்படியாவது கருவறுத்து விட வேண்டும் எனத் துடிப்பவர்கள். ஆனால் அவதூறுகளையும், அடக்குமுறைகளையும் எருவாக்கி வளர்ந்ததே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு.

;