headlines

img

கொடிய அரசின் இழிதொழில்....

கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 243 மில்லியன் டாலர் சம்பாதித்த நிறுவனம் என்.எஸ்.ஓ. இஸ்ரேலின் தொழிற்நுட்ப குழுமமான என்.எஸ்.ஓவின் தொழில், உலகம் முழுவதும் உள்ள மக்களின் அந்தரங்கத் தகவல்களை, உரையாடல்களை, பரிமாற்றங்களை வேவுபார்ப்பதுதான். 

முதலாளித்துவம் ஈவிரக்கமற்றது. லாபம் கிடைக்குமானால், அது என்ன வேண்டுமானலும் செய்யும். தனது சொந்த முதலாளியையே கூடபடுகொலை செய்யும். அப்படிப்பட்ட முதலாளித்துவத்திற்கு மக்களின் அந்தரங்க உரிமைகள் குறித்து எந்த கவலையும் இருக்கப் போவதில்லை.   தகவல் தொழிற்நுட்ப முதலாளித்துவம், மக்களை, அவர்களது உணர்வுகளை, அவர்களது உணவை,அவர்களது உரையாடல்களை - என அனைத்தையும் இடைவிடாமல் தன்வசப்படுத்துகிறது. அவற்றின் மூலம் இன்றைக்கு நாம் காணும்  இணையதள கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் மிகப் பெரும் கொள்ளை லாபங்களை ஈட்டி வருகின்றன. இந்த மிகப் பெரும் சுரண்டலுக்கு அடிப்படைக் கருவியாக இருப்பது நமது கைகளில் தவழும் செல்பேசியும், அவற்றில் இடம் பெற்றுள்ள செயலிகளும் என்றால் மிகையல்ல.

ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளித்துவம் மக்களின் தகவல்களை - தங்களுக்கானவை மட்டுமே என்று கருதி வைத்திருக்கக்கூடிய அந்தரங்க விபரங்களை - உலக கார்ப்பரேட் கம்பெனிகளின்வியாபாரத்திற்காக பயன்படுத்துகிறது; மறுபுறம் அதேமக்களை ஒடுக்குவதற்காகவும், நவீன தொழிற்நுட்பத்தை ஏவுகிறது. இதில் இரண்டாவது ரகம்தான், இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. கட்டவிழ்த்துவிட்டுள்ள பெகாசஸ் வேவு மென்பொருள்.உலகம் முழுவதும் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களின் செல்பேசிகளில் அவர்களே அறியாதவண்ணம் மேற்படி நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை கள்ளத்தனமாக நிறுவியுள்ளது. அதன்மூலம் அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் வேவு பார்த்துள்ளது. இந்த இழிசெயலைஅந்தந்த நாடுகளின் அரசாங்கங்களது ஒடுக்குமுறை திட்டத்திற்காக என்.எஸ்.ஓ நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.இந்தியாவில் ஏற்கெனவே ஒட்டு மொத்த மக்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து அவர்களை ஒடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மோடி அரசு, இன ஒடுக்குதல் மற்றும் இன அழிப்பையே தொழிலாக கொண்டுள்ள இஸ்ரேல் நாட்டின் நிறுவனத்துடன், தனது சொந்த மக்களை வேவு பார்ப்பதற்காக மென்பொருள் தயாரித்து அளிக்குமாறு நாடியதில் வியப்பேதுமில்லை. 

ஆனால் முதலாளித்துவத்தின் தகவல் தொழிற்நுட்ப  வளர்ச்சிகளை சாத்தியப்படுத்தியிருப்பது அதில் பணியாற்றும் கோடானுகோடி உழைப்பாளி மக்கள்தான். ரகசியமாக வேவு பார்க்கும் மோடி உள்ளிட்ட கேடுகெட்ட அரசுகளின் செயலை அந்த தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சியின் மற்றொரு பகுதி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிட்டது. இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல, நரேந்திர மோடியின் சொந்தக் கட்சி தலைவர்களும் கூட வேவு பார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகிவிட்டது. கொடியவர்களும் கோழைகளும் வேவு பார்க்காமல்வாழ முடியாது. மோடி அரசு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

;