headlines

img

தலிபான் பயங்கரம்....

டேனிஷ் சித்திக். இந்த பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய ஊடக உலகின் தலைசிறந்த புகைப்பட பத்திரிகையாளர் இவர். மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் நடந்தபோது, அங்கு சென்று நேரடியாக புகைப்படங்கள் எடுத்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர் குழுவில் ஒருவராக சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக 2018 ஆம் ஆண்டு புலிட்சர் விருதுபெற்ற, 38 வயதே நிரம்பிய இளம் பத்திரிகையாளர் சித்திக்.சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் அரசுப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் குறித்து செய்தி சேகரிக்க நேரடியாக களத்திற்கு சென்ற போது அங்கு இருதரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் சிக்கி இவர் பலியானார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து அவரது உடலும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, புதுதில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியாஅடக்கஸ்தலத்தில் இறுதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்தியா முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் பெரும் அதிர்ச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். 

ஆனால் தற்போது அதைவிட அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. டேனிஷ் சித்திக்,இருதரப்பினரிடையே நடந்த மோதலில் சிக்கிஉயிரிழக்கவில்லை; மாறாக தலிபான் பயங்கரவாதிகளால் உயிரோடு பிடிக்கப்பட்டு, இழுத்துச்செல்லப்பட்டு, இவர் யார் என்று அடையாளம்காணப்பட்டு அதன் பின்னர் முகம் சிதைக்கப்பட்டும், துப்பாக்கிக் குண்டுகளால் கொடூரமான முறையில் சல்லடையாக துளைக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதே அந்தக் கொடிய செய்தி.அமெரிக்காவை மையமாக கொண்ட புலனாய்வு பத்திரிகை ஒன்று இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள காந்தகார் மாநகருக்கு அருகில் உள்ள ஸ்பின் போல்டாக் பகுதியில் தலிபான்கள் நடத்தும் தாக்குதலை படமெடுப்பதற்காக அரசுப் படையினரின் உதவியுடன் ஒருவாகனத்தில் சென்றுள்ளார் சித்திக்.

தலிபான்கள் இந்த வாகனங்களை குறி வைத்து தாக்கியுள்ளனர். இதில் லேசான காயத்துடன் தப்பிய சித்திக் அருகில் உள்ள மசூதிக்குள் சென்று ஒளிந்துகொண்டார். இதையறிந்த தலிபான்கள் மசூதி மீதுதாக்குதல் நடத்தியுள்ளனர். உள்ளே புகுந்துசித்திக்கை சிறைப்பிடித்துள்ளனர்.  பத்திரிகையாளர் என்று  அவர் மன்றாடியும், அவரை இழுத்துச்சென்று அடையாளங்களை உறுதி செய்து, பத்திரிகையாளரை சிறைப் பிடிக்கக்கூடாது என்ற சர்வதேசவிதிகளுக்கு மாறாக அவரை படுகொலை செய்துள்ளனர் என்ற விவரத்தை அமெரிக்க புலனாய்வு பத்திரிகை உறுதி செய்துள்ளது. இது சர்வதேச கண்டனத்திற்குரிய பயங்கரம்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு காலம் கொடூரமான படுகொலைகளை நிகழ்த்திய அமெரிக்க படை, எந்த தலிபான்களை  அழிக்கப் போவதாகக் கூறி அங்கு சென்றதோ, அதே தலிபான்களுக்குதற்போது வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும் அதற்கு காத்திராமல் தலிபான்கள் தங்களது கொடிய ஆட்சியை நிறுவுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஈவிரக்கமற்ற வெறியாட்டத்தை தலிபான்கள் கைவிடாமல் ஆப்கனில்அமைதி திரும்புவது சாத்தியமில்லை.

;