headlines

img

தமிழகம் தலைநிமிர்கிறது.... கேரளம் வழிகாட்டுகிறது....

தமிழகம், கேரளம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.   மொத்தமாக பார்க்கும்போது மதவெறி பாஜகவுக்குஎதிராக இந்தத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
தமிழகத்தில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியை துடைத்தெறிந்து திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அமைக்க உள்ளது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மத்திய - மாநிலஆளுங்கட்சிகளின் அனைத்து அராஜகங்களையும் முறியடித்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது சாதாரணமான ஒன்றல்ல. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பாஜகவின் கைபொம்மையாகவே அதிமுக அரசு செயல்பட்டது. மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோயின. தமிழகப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடியது. அதிமுகவின் கடைசிநேர சாகசங்களை மக்கள் புறந்தள்ளி திமுக தெளிவான முறையில் ஆட்சி அமைப்பதற்குரிய வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு எழுதியுள்ளனர். நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. 

தமிழக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு மதச்சார்பின்மைக்கும், கூட்டாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் ஆதரவான ஒன்றாகும். திமுக ஆட்சி மலர்வதன் மூலம் தமிழகம் தலைநிமிரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. கேரள வரலாற்றில் ஒரு முறை ஆட்சியிலிருந்த கட்சி அடுத்த முறை வெற்றிபெற்றதில்லை. அந்த வரலாற்றை முறியடித்து இடதுஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து மக்கள் நலப் பணிகளை தொய்வின்றி தொடர கேரள மக்கள் தீர்ப்பு  எழுதி யுள்ளனர். கேரளத்தில் பாஜகவின் கணக்கை இந்த தேர்தலுடன் முடித்து வைப்போம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.  

மத்திய பாஜக ஆட்சி கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு இழைத்த வஞ்சகங்கள், அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. அத்தனையையும் முறியடித்து மக்களின் நம்பிக்கை வெளிச்சமாக இடதுஜனநாயக முன்னணி மீண்டும் வெற்றி குவித்து புதிய வரலாற்றை படைத்துள்ளது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. கடந்த காலங்களில் பாஜகவை மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளே வளர்த்துவிட்டன. மதரீதியாக வாக்குகளை பிரிப்பதில் திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் போட்டி போட்டன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் மேற்குவங்கத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதும்அவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. இந்த இரு கட்சிகளுக்கு இடையே போட்டி என்று களம் குறுக்கப்பட்டதால் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினால் வெற்றிபெற முடியவில்லை. 

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசை ஆள விடாமல் ஆளுநர் மூலம் பாஜக தொல்லை கொடுத்தது. அங்கு என்ஆர்காங்கிரஸ்பெற்ற வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். அசாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மக்களை பிளவுபடுத்தியதன் மூலம் பெற்றுள்ள வெற்றி இது.  தமிழக, கேரள முடிவுகள் நம்பிக்கை அளித்த போதும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மேலும் மேலும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. 

;