headlines

img

ஓர வஞ்சனையும் திடீர் கரிசனையும்....

ஆண்டுக்கொரு முறை நீத்தார் நினைவு வருவது போல, ‘மனதின் குரல்’ நிகழ்வில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மொழியின்அருமைகளும், பெருமைகளும் நினைவுக்கு வந்துவிடுகிறது. கண்ணீர் சிந்தாத குறையாக தமிழ்மொழிக்காக அவர் உருகுகிறார்.ஞாயிறன்று மனதின் குரல் நிகழ்வில் பேசும் போது, உலகில் தொன்மையான மொழி, அந்த மொழிநம்முடையது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடையவேண்டும். நான் தமிழ்மொழியின் மிகப் பெரிய அபிமானி, தமிழ்மொழி குறித்து பெருமையடைகிறேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதை படிக்கும்போது ‘‘அம்சிறை அடைப்பேம்; மாசில் புகழ் காதல் உறுவேம்; வளமை கூரப்பேசுவதுமானம்; இடை பேணுவது காமம்; கூசுவதுமானுடரை; நன்று, நம் கொற்றம்’’ என்ற கம்ப ராமாயண வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. சீதையைகவர்ந்து வந்த ராவணனை பார்த்து கும்பகர்ணன்கூறுவதாக கம்பன் எழுதிய வரிகள் இவை. நாம் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறோம், என்ன ஓர் ஆட்சி என இடித்துரைக்கும் வரிகள் இவை. ஒருபுறத்தில் தமிழ்மொழியின் மீதுதாளாத காதல் கொண்டிருப்பதுபோல பேசுவது, மறுபுறத்தில் பல்லாயிரம் ஆண்டு கால வரலாறும், பண்பாடும்  இலக்கிய தொடர்ச்சியும் கொண்ட தமிழைஅழிப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்வது என்பதே மோடி அரசின் செயல்பாடாக உள்ளது. 

உண்மையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகள் மீதும் இவருக்கு பற்று இருப்பதுஉண்மையானால் அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் ஒன்றிய ஆட்சி மொழிகளாக அறிவிப்பதற்கு தயக்கம் ஏன்? நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளில் தடையின்றி பங்கேற்க இருக்கும் தடை அரண்களை தகர்க்கமறுப்பது ஏன்? தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் கூட இந்தியில் பதிலளிக்கும் சில ஒன்றிய அமைச்சர்கள், பிரதமர் மோடியின் மனதின் குரலை கேட்பதே இல்லையா? புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை தள்ளி வைத்துவிட்டு, வம்படியாக சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மட்டும் திணிக்கத் துடிப்பது ஏன்? சமஸ்கிருத மொழியை புத்துயிர் ஊட்டி வளர்க்க பல ஆயிரம் கோடிகளை அள்ளித் தரும்மோடி அரசு தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு கிள்ளிக் கூட தருவதில்லையே ஏன்? கீழடி உள்ளிட்ட இடங்களில் பழங்கால தமிழர் வரலாறு, பண்பாடு குறித்த ஆய்வுகளிலிருந்து ஒன்றிய தொல்பொருள் ஆய்வுத்துறை விலகிக்கொண்டது ஏன்? மறுபுறத்தில் வடமாநிலங்களில் நடைபெறும் ஆய்வுகளில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்? தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதத்தை முதன்மை மொழியாக்கிவிட்டு தமிழை வேண்டாவிருப்பப் பாடமாக மாற்றுவது ஏன்? இந்திய மொழிகள் அனைத்தும் சமச்சீராகவும், சம வாய்ப்போடும்வளர ஒன்றிய அரசு வழி செய்யுமானால் பிரதமரின் தமிழ்ப்பற்றில் உண்மை கொஞ்சமாவதுஒட்டிக் கொண்டிருக்கும். 

;