headlines

img

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் அபாயக்குரல்....

மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு அரண்களாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான அறிவிப்புகள் ஏராளமாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் களின் மீட்சிக்கு உருப்படியான எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. 

நரேந்திர மோடி ஆட்சியில் 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீது பேரிடியாக இறங்கியது. இதிலிருந்து மீள முடியாமல் அந்தத் துறை திணறியது. இடிமேல் இடியாக அடுத்து வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு அந்தத்துறையை மேலும் நிலைகுலையச் செய்தது.அடுத்து கொரோனா தொற்றையொட்டி அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அந்தத் துறை சார்ந்த தொழில்முனைவர்கள் மட்டுமின்றிதொழிலாளர்களும் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இதிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை காப்பாற்ற மோடி அரசுக்குமனமில்லை. இந்தத் துறையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து அதையும் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மாற்றிவிடலாம் என்பதே அரசின் திட்டமாக உள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. 

பெரும்பாலான தொழில்முனைவோர் இந்த தொழிலை இனிமேல் நடத்த முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 3லட்சம் கோடி அளவுக்கு சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கப்படும் என்றும் 50லட்சம் தொழில் நிறுவனங்கள் இதனால் பயன்பெறும் என்றும் மத்திய அரசு கூறியது. 7 கோடிக்கும் மேற்பட்ட அளவில் இத்தகைய தொழில் நிறுவனங்கள் இருக்கும் நிலையில் மீதமுள்ள நிறுவனங்களின் கதி என்ன என்ற கேள்வியை தொழில்முனைவோர் எழுப்பு கின்றனர். 

மத்திய அரசு அறிவித்த பண்ட் ஆப் பண்ட் மற்றும் ரீ ஸ்டிரச்சரின் கடன் போன்றவையும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு பலனளிக்காதுஎன்று அவர்கள் கூறுகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலிலிருந்து 30சதவீதம் அளவுக்குதொழில்முனைவோர் வெளியேறுவார்களே யானால் 2 கோடிப் பேருக்கு மேல் வேலையிழப்பு ஏற்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 20 கோடிபேருக்கான வேலைவாய்ப்புகளும் பாதிப்படையும் என்று பொருள். சுயசார்பு இந்தியா என்று கூறிக்கொண்டு இந்திய தொழில்துறைக்கு எதிரான நடவடிக்கை களையே மோடி அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கொரோனா கால நிவாரண அறிவிப்புகளில் பெரும்பாலானவை கார்ப்பரேட் முதலாளிகளின் கரங்களைப் பலப்படுத்தவே உதவி செய்யும். விவசாயம், நெசவு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் என கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறைகளை குறி வைத்து அழிப்பதன்மூலம் நாட்டில் மிகப்பெரிய பஞ்சத்தையும் வறுமையையும் மோடி அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
 

;