headlines

img

130 கோடி மக்களின் பெருமைமிகு மகள்....

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளிலேயே தாய்நாட்டிற்காக  பதக்கம் பெற்றுத்தந்துள்ளார் பளுதூக்கும் வீராங்கனை  மீரா பாய் சானு. அவரது சிறப்பான துவக்கத்தைக் கண்டு நாடே பெருமிதம் கொள்கிறது.

ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து பளுதூக்குதல், குத்துச்சண்டை, வில்வித்தை, மல்யுத்தம், ஹாக்கி, வாள்வீச்சு, துப்பாக்கிச் சுடுதல், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். சிலர் ஏமாற்றம் அளித்தாலும் குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளவர்கள்  நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மகளிர் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் மீராபாய் சானு பதக்கம் வென்றதால் இந்திய அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.  ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு பதக்கம் வெல்வதே குதிரைக் கொம்பாக இருந்த காலம் உண்டு. ஆனால், இந்த ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வழங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே இந்தியா தனது முதல் பதக்கத்தைப் பெற்றது நல்ல துவக்கம்.

இதற்குக் காரணமான மீராபாய் கடந்துவந்த பாதை மிகவும் சவாலானது. மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளது அவர் வசிக்கும் சிறிய கிராமம்.  மணிப்பூரைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை குஞ்சுராணி தேவியால்  பளுதூக்கும் விளையாட்டின் மீது இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டில் அவர்பயிற்சி செய்யத் தொடங்கியபோது, முதலில் அவரிடம் இரும்பு பார் இல்லை, எனவே அவர் மூங்கிலைக் கொண்டு பயிற்சி செய்தார்.கிராமத்தில் பயிற்சி மையம் இல்லையென்பதால், அவர் பயிற்சிக்காக 50-60 கி.மீ தூரம் செல்வார். உணவில் தினமும் பால் மற்றும் கோழிதேவைப்பட்டது, ஆனால் சாதாரண குடும்பத்தின் பிறந்த மீராவுக்கு அது சாத்தியமில்லை. இருப்பி னும் விடாமுயற்சியாலும் மன உறுதியாலும் அவர்11 வயதில்  15 வயதுக்குட்பட்ட  சாம்பியனாகவும், 17 வயதில் ஜூனியர் சாம்பியனாகவும் மாறினார்.  

2016 ரியோ ஒலிம்பிக்கில் மோசமான செயல்திறனால் படுதோல்வி அடைந்ததால் மனரீதியாகஅவர் பாதிக்கப்பட்டார். ஒவ்வொரு வாரமும் மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டியிருந்தது.  ரியோ ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு,  விளையாட்டை விட்டுவிடுவது குறித்தும் மீரா சிந்திக்கத்தொடங்கினார். பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் தந்த ஊக்கத்தாலும் ஆதரவாலும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு சர்வதேசப் போட்டிகளில் ஜொலிக்கத்தொடங்கினார்.

2018 இல் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 48 கிலோபளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றார். 2017உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தனதுஎடையை விட கிட்டத்தட்ட நான்கு  மடங்குஎடையை தூக்கியதன் மூலம் தங்கம்வென்றார்.அதாவது 194 கிலோ எடையை அவர் தூக்கினார். அந்த வரிசையில் தற்போது  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளதன் மூலம் தாய்நாட்டின் பெருமைமிகு மகளாக அவர் மாறியுள்ளார்.

;