headlines

img

கூட்டுறவு வங்கிகளையும் சூறையாடத் திட்டம்....

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு,கூட்டுறவு அமைச்சகம் என்ற பெயரில் புதியஅமைச்சகத்தை உருவாக்கி அதை உள்துறைஅமைச்சராக உள்ள அமித்ஷா வசம் ஒப்படைத்துள்ளது. மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கத்திட்டமிட்டு இந்த அமைச்சகத்தை மோடி அரசு உருவாக்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூட்டுறவுத்துறை என்பதும் கூட்டுறவுச் சங்கங்கள் என்பவையும் முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணை  இதை உறுதி செய்துள்ளது.  தமிழ்நாடு, கேரளா  உள்ளிட்டபல மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகள், சொசைட்டிகள்  பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒன்றிய அரசு தனியாகக் கூட்டுறவு அமைச்சகத்தை இவ்வளவு ஆண்டுகள் கழித்து ஏற்படுத்தக் காரணம் என்ன எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஜி.எஸ்.டி வரி நிலுவைத்தொகைகளை வழங்காமல் மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயைக் குறைத்தும் மாநில மொழிகளைப் புறக்கணித்து, இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, அதிகாரங்கள் அனைத்தையும் மத்தியில்  குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த குறி கூட்டுறவு வங்கிகள் தான்.நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் உள்ளன.

இவற்றில் மொத்தமாக 12 லட்சம் கோடிரூபாய் பொதுமக்களின் வைப்புத்தொகை உள்ளது.கேரளாவில்  மாநில அரசு உருவாக்கிய கூட்டுறவுவங்கியில் 80ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத்தொகை உள்ளது. இந்த தொகை கேரள மாநில விவசாயிகளுக்கும்  மக்கள் நலத்திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகிறது. கூட்டுறவு அமைப்புகளும் நியாயமான முறையில் செயல்பட்டு வருவதால் அம்மாநிலத்தில் வைப்புத்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கூட்டுறவு வங்கிகளை ஒன்றிய அரசு தனது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏதுவாக வங்கிகள்தொடர்பான 1947 ஆண்டுச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்து கடந்தாண்டு மார்ச் மாதம் அவசரச்சட்டத்தைப் பிறப்பித்தது. பின்னர் கடந்தாண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக்கியது. 

கூட்டுறவு அமைப்புகளை ரிசர்வ் வங்கி முறைப்படுத்தினாலும் அவை மாநில பதிவாளர் கட்டுப்பாட்டில் தான் இதுவரை  உள்ளன. ஆனால் ஒன்றியஅரசின் சட்டத் திருத்தம் மூலமாகக் கூட்டுறவு வங்கிகளில் சிறிய முறைகேடு நடைபெற்றாலும் அவற்றின் இயக்குநர் குழுவைக் கலைத்துவிட முடியும். இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் ஒன்றிய அரசு தலையிடுகிறது.பொதுத்துறை வங்கிகளைத் தனது கூட்டுக் களவாணிகளுக்காகச் சூறையாடிய ஒன்றிய அரசு, இப்போது நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளையும் அதில் குவிந்துள்ள ஏழை எளிய நடுத்தரமக்களின் 12 லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு பணத்தையும் சூறையாடத்  திட்டமிட்டுள்ளது. அதை உறுதிசெய்யும் விதமாகவே அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது.  மாறாக கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக  இந்த அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மோடி அரசு கூறுவதை யாரும் நம்பத்தயாராக இல்லை.

;