headlines

img

நாவன்மை மட்டும் போதாது..

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிறன்று  ‘மனதின் குரல்’ நிகழ்வில் பேசும் போது ஆகஸ்ட்9 வெள்ளையனே வெளியேறு போராட்டம் பற்றிகுறிப்பிட்டு இந்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மகாத்மா காந்தி, இந்தியாவை சுரண்டிக் கொழுத்த ஆங்கிலேய அந்திய ஆட்சியை வெளியேற்றியே தீருவதென்று அந்தப் போராட்டத்தைத் துவக்கினார். ஆனால் பிரதமர் மோடியோ அந்நிய மூலதனத்துக்கு அகலக் கதவு திறந்து அழைக்கிறார்.
காப்பீட்டுத் துறை, பாதுகாப்புத் தளவாடத்துறை என நாட்டின் பாதுகாப்போடு நெருங்கியதொடர்புள்ள துறைகளில் கூட அந்நிய மூலதனத்தை இருகரம் நீட்டி வாவாவென வரவேற்கிறார். அதுவும் போதாதென்று எண்ணெய் கழகத்தில் நூறு சதவீதம் அந்நிய மூலதனத்துக்கு அனுமதி வழங்கிட ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்து அறிவித்தது. முதல் வாரம்அந்நிய மூலதனத்துக்கும் உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அழைப்பு; அடுத்த வாரம் வெள்ளையனே வெளியேறு பற்றி புகழ்மாலை. என்னே பிரதமர் மோடியின் நடிப்பு!

இந்திய வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு துரோகம் செய்ததும் காட்டிக்கொடுத்ததும் இன்றைய பாஜகவின் தாய்வீடானஆர்எஸ்எஸ், இந்துமகா சபையின்  களங்கத்துக்குரிய செயல்பாடு. இவருக்கும் முன்னால் பாஜக சார்பில் பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய்ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுத்தகறைமிகு வரலாற்றை இவர்களால் எந்தக் கங்கையிலும் கழுவிட முடியாது.

தடுப்பூசி போடுவதில் நூறு வயதை தாண்டிய தனது தாயாரை உதாரணமாகக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி பெருமை பேசியிருக்கிறார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொருவருக்கும் இருதவணை தடுப்பூசி போட வேண்டுமென்றால் எத்தனைகோடி தவணை தடுப்பூசி மருந்து தேவைப்படும்? அதிலும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் செலுத்துவதற்கு உரிய பணியை இன்னும் தொடங்கவே இல்லை. வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரு வேளை வாய்ப்பிருக்கலாம் என்றே ஒன்றிய மருத்துவத்துறை வட்டாரங்களின் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.


ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதற்கே இன்னும் 100 கோடி தவணை தடுப்பூசி மருந்து தேவைப்படுகிறது. அதற்கே இன்னும் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் நீட்டி முழக்கும் வெட்டிப் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. தடுப்பூசி செலுத்துவதில் தற்போதைய தினசரி சராசரிவெறும் 40 லட்சம் தான். ஆனால் இதுவே கடந்தமாதத்தில் தினசரி சராசரி 64 லட்சமாக இருந்தது.இந்த  லட்சணத்தில் தான் இப்படி பேசியிருக்கிறார்.
தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் மக்களிடம் வெற்று உபதேசம் செய்வதால் என்ன பயன்? பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்த மறுப்பது ஏன்?மனச்சாட்சியின் குரலை என்றைக்காவது கேட்டதுண்டா பிரதமர் மோடி?

;