headlines

img

கொரோனா வரைந்த எதிர்மறை சித்திரங்கள்....  

கொரோனா வைரஸ் பெருநோய்த் தொற்றின்பிடியிலிருந்து இந்தியா இன்னமும் விடுபடவில்லை. கொரோனா விதிமுறைகளை முறையாககடைபிடிக்காவிட்டால் இந்தியாவில் இரண்டாவதுஅலை பரவுவதை தடுக்க முடியாது என எய்ம்ஸ்தலைவர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்துவிட்ட போதும் முகக் கவசம் அணிவது போன்ற நடைமுறைகளை கைவிடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். உருமாறியுள்ள கொரோனா அதிக வீரியம் கொண்டதாக இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 83 சதவீத அளவு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவல் தாக்கத்தை அடுத்துகல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கமாநில அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு எவ்வித அலட்சியமும் இல்லாமல் உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.இது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கினால் இந்திய மக்களின் கடன் சுமை பெருமளவு அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பெருமளவு வேலையிழப்பு ஏற்பட்டது. ஏராளமான சிறு, குறுநிறுவனங்கள் மூடப்பட்டன. முறைசாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பகுதி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். ஏழை, எளிய நடுத்தரகுடும்பங்களின் பொருளாதாரம் நொறுங்கியது. ஆனால் இந்த சரிவிலிருந்து மக்களை பாதுகாக்கஉரிய நிவாரணம் அளிக்க மோடி அரசு மறுத்தது. ஆனால் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் வருமானம் அதிர்ச்சியளிக்கும் வகையில்  இந்த காலத்தில் அதிகரித்தது. அம்பானியின் வருமானம் ஒரு மணி நேரத்திற்குரூ.90 கோடி அளவிற்கு இருந்ததாக தகவல்கள்வெளியாகின.

ஆனால் 2020-21 நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்திய மக்களின் கடன் சுமை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 37.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீடுகளில் சேமிக்கும் அளவு ஜிடிபியில் 10.4 சதவீத அளவுக்குசரிந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மக்களின் சேமிப்பும் கணிசமாக குறைந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. குறைந்தபட்ச நிவாரணத்தை கூட மத்திய அரசு அளிக்கமறுத்ததன் விளைவே இந்த எதிர்மறை சித்திரங்களாகும். பொருளாதார மீட்சிக்கு உருப்படியான நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்காத நிலையில் இரண்டாவது அலையின் தாக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கும். மக்களின் கடன் சுமையை குறைக்க, சேமிப்பை அதிகரிக்க மத்தியஅரசு இப்போதாவது, ஏதாவது செய்ய வேண்டும்.

;