headlines

img

நம்மை விழுங்கும் முன் விலக்கி வைப்போம்...

மண்ணை மலடாக்கிய பிளாஸ்டிக் நுண் துகள்கள், தற்போது காற்றிலும் கலந்து மக்களின் உயிரை நேரடியாக விழுங்கும் நிலை உருவாகியிருக்கிறது. பிளாஸ்டிக் நம்மை விழுங்கும் முன்நாம் அதற்கு விடை கொடுக்க வேண்டிய கட்டாயம்உருவாகியிருக்கிறது. 

சென்னையில் மக்கள் சுவாசிக்கும் காற்றுமாசில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து  தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில்,ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது.  அதில்  தற்போதுள்ள  காற்றுத் தர கண்காணிப்பு முறையில் பிளாஸ்டிக் நுண் துகள்களை அளவிடும் முறை இல்லை; அதனைசேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறது.

காற்று மாசுபாட்டால் 2019ஆம் ஆண்டில் மட்டும்இந்தியாவில் 16.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2 கோடியே 60 லட்சம் கோடி மதிப்பிலான  பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் இதுவரை இந்தியாவில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 660 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த இரண்டு  புள்ளி விபரங்களை வெளியிட்டிருப்பது ஒன்றிய அரசின்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தான்.  உடனடியாக நம் உயிரை பறிக்கும் கொரோனா எத்தனை ஆபத்தானதோ, அதே போல, மெல்ல மெல்ல ஆனால் நிச்சயம் கொல்லும் பிளாஸ்டிக் நுண்துகள் மாசுவும் மிகவும் ஆபத்தானது.

பிரதமர் மோடி 73 வது சுதந்திர தின உரையில்ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை,மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.தற்போது 75 வது சுதந்திர தினம் வரவுள்ளது. ஆனால்இதுவரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.நாம் காலையில் பல்துலக்கும் பேஸ்ட்டில் இருந்துஎழுதும் பேனா வரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்தான்.  சாதாரண மக்களை பிளாஸ்டிக் பயன்படுத்துவதில் இருந்து எளிதாக தடுத்திட முடியும்.ஆனால்அதனை உற்பத்தி செய்யும் பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேட் நிறுவனங்களையும், அதனை பயன்படுத்தும் ஹிந்துஸ்தான் லீவர், ரிலையன்ஸ், அமேசான், பிளிப்கார்ட்  போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களையும்  மோடி அரசால் தடுத்திடமுடியாது. பெரும் நிறுவனங்களின் அழுத்தத்தின்  காரணமாகவே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை 2022 வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு 90 லட்சத்து 46 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகிறது. இதில் 60 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்கிறது நாடாளுமன்ற புள்ளிவிபரம்.  ஆனால் ஐநா ஆய்வின் படி வெறும்9 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 79 சதவிகிதம் குப்பைக் கிடங்குகளிலும், பொதுவெளியிலும் கிடப்பதாக கவலை தெரிவிக்கிறது. ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இணைந்துஉறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலமே மண்ணுக்கும், மக்களுக்கும் உலை வைக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும். பிளாஸ்டிக்கை தவிர்த்திட தாமாக அனைவரும் முன்வர வேண்டும்.

;