headlines

img

குடியரசைக் கொண்டாடுவோம்....

இந்தியத் திருநாடு 72ஆவது குடியரசு தினத்தை கொண்டாடி மகிழ்கிறது. இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும்.மக்கள் ஆட்சி மாண்புகளையும், கூட்டாட்சி கோட்பாட்டையும், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்ற விழுமியங்களையும் உயர்த்திப்பிடிக்கும் அரசியல் சாசனத்தை பாதுகாக்க உறுதியேற்கும் நாளாக இந்நாள் அமைந்திடவேண்டும்.

விரிவான விவாதத்திற்கும், பல கட்ட ஆலோசனைக்குப் பிறகும் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் மத்திய அரசின் அதிகாரங்களை வரையறுத்துள்ளதுபோலவே மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களையும் வரையறுத்துள்ளது. ஆனால் மாநில உரிமைகள் மற்றும் அதிகாரம், நிதி ஆதாரம் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு அனைத்தும் மையப்படுத்தப்படுவது என்பது பாஜக கூட்டணி ஆட்சியில் அதிர்ச்சிதரத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. 
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று தட்டையான ஒற்றைத் தன்மையை கொண்டதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல், கருத்தியல் கோட்பாடு. அந்த அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக அரசியல் சாசனத்தின் மாண்புகளை அழித்து ஆர்எஸ்எஸ் கோட்பாட்டையே நாட்டின் அரசியல் சட்டமாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு என்பது மாநில உரிமைகளுக்கும், மொழி சமத்துவத்திற்கும் மட்டும் எதிரானது அல்ல. அரசியல் சாசனம் வலியுறுத்துகிற உள்ளார்ந்த பன்முகத் தன்மைக்கும் எதிரானது ஆகும்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசியல்சட்டத்தையே திருத்தி எழுத ஆர்எஸ்எஸ் பரிவாரம் முயன்றது. அதற்கென குழு அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. கடும் எதிர்ப்பின் காரணமாக அதிலிருந்து அப்போதைக்கு பின்வாங்கினார்கள். ஆனால் தற்போது அந்த முயற்சியை தவணை முறையில் செய்து வருகின்றனர். அரசியல் சாசனத்தின் முகவுரையிலிருந்து மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகளை அகற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு எழவே அதையும் கைவிட்டனர். ஆனால் அறிவிக்காமல் மதச்சார்பற்ற இந்தியா என்ற கட்டமைப்பை தகர்த்து சகிப்புத் தன்மை இல்லாத இந்துத்துவா நாடாக இந்தியாவை மாற்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர்.

வேளாண் விரோத திருத்தச் சட்டங்கள் வேளாண்மையை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது மட்டுமல்ல, மாநிலங்களின் பட்டியலிலிருந்து விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் நோக்கம் கொண்டதும் ஆகும். ஒரேநாடு, ஒரே வரி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி மாநிலங்களின் நிதி ஆதாரத்தைகடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பின்னணியில் குடியரசு நாளை கொண்டாடுவது என்பதுமாநில உரிமைகள், கூட்டாட்சி, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை அதிகப்படுத்துவ தாகவே அமைந்திட வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் உள்ளார்ந்த வலிமை என்பது அதன் பன்முகத் தன்மையே என்பதை இந்த நாளில் உரத்துச் சொல்லுவோம்.

;