headlines

img

மக்களின் ஆற்றாமை ஆர்ப்பாட்டமாக வெடிக்கட்டும்...

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐத் தொட்டுவிட்டது. சில மாவட்டங்களில் 100ரூபாயைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் கடந்த வாரமே பெட்ரோல்விலை சதமடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. டீசல் விலையும் பெட்ரோலுடன் போட்டிபோட்டுக் கொண்டு லிட்டருக்கு 95ரூபாயை தொட்டு 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 

ஆனால் இதுகுறித்து கொஞ்சம் கூட ஒன்றியஅரசுக்கு கவலை இல்லை. பிரச்சனையை திசைதிருப்பும் வகையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு க்கு காரணம் என்று சில ஒன்றிய அமைச்சர்களே கூறுகின்றனர். நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஏழு ஆண்டுகளும் பெட்ரோலியப் பொருட்களின் விலை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்து வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்ட போது கூட அதனுடைய பலன் இந்திய மக்களுக்கு கிடைத்துவிடா மல் வரிக்கு மேல் வரி போட்டு விலை குறையாமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு. பெட்ரோலியப்பொருட்களுக்கு அரசு விலை தீர்மானிக்கும் முறையை விலக்கிக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்கள்தான் சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப விலை தீர்மானிக்கிறது என்று சப்பை கட்டு கட்டுவார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு  நிறுத்தி வைக்கப்படும். பிறகு வாக்கு எண்ணிக்கைமுடிவதற்கு முன்பே விலை உயர்வு வேகமெடுக்கத் துவங்கிவிடும்.

சமையல் எரிவாயு விலை ஒரே ஆண்டில் ரூ.200 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. “உங்கள் பணம்உங்கள் கையில்” என்ற பெயரில் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் போடுவதாகக் கூறிவிட்டு கொரோனா கொடுங்காலத்தில் அதையும் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது மோடி அரசு. அல்லது பெயரளவுக்கு சொற்பதொகையே செலுத்தப்படுகிறது. சமையல் எரிவாயுக்கு தரப்படும் மானியம் கிட்டத்தட்ட நிறுத்தப்படும் நிலையில் உள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும்உயர்ந்து கொண்டிருக்கின்றது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் தொடர் ஊரடங்கால், விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலபெட்ரோலியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.வறுமை, வேலையின்மை பிரச்சனையால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தொற்றுநோய் ஏற்படுத்திய உயிர் பயத்தோடு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இந்த நிலையில் அகில இந்திய அளவில் இடதுசாரிக் கட்சிகளும் தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்டக் கட்சிகளும் ஜுன் 28, 29, 30 தேதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்திட உள்ளன. இந்தப் போராட்டங்களில் எழுப்பப்படும் கோபமும் ஆவேசமும் மக்களின்  நிலையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தட்டும்.

;