headlines

img

ஆரோக்கியமான விவாதம் அரங்கேறட்டும்....

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. 17வது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நடவடிக்கைகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பட்ஜெட் கால கூட்டத் தொடர், மழைக்கால கூட்டத் தொடர் இரண்டும் முன்கூட்டியே முடிக்கப்பட்டன. குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவில்லை. 

இந்தாண்டுக்கான கூட்டத்தொடர் ஜனவரி 23 ஆம் தேதி குடியரசுத்  தலைவர் உரையுடன் துவங்கியது. பின்னர் பிப்ரவரி 15 ஆம்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் பட்ஜெட் மற்றும்விவாதம் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. 
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலைமிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதம் நடைபெறவேண்டியது அவசியம்.ஆனால் இதுகுறித்து முழுமையாக விவாதம் நடத்த ஒன்றிய அரசு தயங்குகிறது. இரு அவைகளிலும் கொரோனா நிலைமை குறித்து விரிவாக விவாதம் நடத்த வேண்டுமென அனைத்துக் கட்சிகூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், செவ்வாயன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் கொரோனா பணிகள் குறித்து உரையாற்றுவார் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முழுமையான விவாதத்தை நடத்துவதை தவிர்க்க அரசு இத்தகைய ஆலோசனையை முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

கொரோனா நிவாரண நிதி உரிய அளவுக்கு வழங்கப்படாதது மட்டுமின்றி தடுப்பூசி மாநிலங்களுக்கு வழங்குவதில் பாரபட்சமும் குளறுபடியும்நீடிக்கிறது. தனியார் மருந்து நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கே தடுப்பூசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு உடன்பாடு செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் தடுப்பூசி வழங்குவது என்ற முடிவையும் மறுபரிசீலனை செய்ய மறுக்கிறது.இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படுவதும், ஒன்றிய அரசு பொறுப்புடன் பதில் சொல்வதும் அவசியமாகிறது. 

மறுபுறத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைதொடர்ந்து உயர்த்தப்படுவது, தேசத் துரோகச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் ஜனநாயக உரிமைகளை பறிப்பது, வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப் பெற மறுப்பது, இந்தி மற்றும்சமஸ்கிருத திணிப்பு, நீட்தேர்வு என விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளம். இதற்கெல்லாம் முகங்கொடுக்க மோடி அரசு தயாராகயிருக்கிறதா என்பதுதான் கேள்வி. விவாதங்கள் ஆரோக்கியமாக நடைபெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அதுஒன்றிய அரசின் அணுகுமுறையில்தான் உள்ளது.

;