headlines

img

வழக்கு வளையத்தில் சிக்கிய ஜனநாயகம் மூச்சு விடட்டும்...

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒன்றியஅரசின் அநியாய சட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜககூட்டணி அரசு ஒன்றிய ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு அடுத்தடுத்து பல அக்கிரமச் சட்டங்களை கொண்டு வந்தது. சிறுபான்மை மற்றும் பட்டியலினபழங்குடி மக்களை குறிவைத்து குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தலைநகர் தில்லி துவங்கி இந்தியா முழுவதும் எழுச்சிமிக்க போராட்டங்கள் நடைபெற்றன.தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. 

பாஜகவின் பினாமி அரசாகவே செயல்பட்டஅதிமுக அரசு அற வழியில் போராடியவர்கள் மீது ஏராளமான வழக்குகளை வகைதொகையின்றி தொடுத்தது. பல வழக்குகளில் முதல் தகவலறிக்கையும், குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு சம்மனும் அனுப்பப்பட்டன. போராடுபவர்களை அலைக்கழித்து அச்சுறுத்துவதே அரசின் நோக்கமாக இருந்தது. இதேபோல மோடி அரசு கொண்டு வந்த மூன்றுவேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து இன்றுவரை தலைநகர் தில்லியில் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து போராடியவர்கள் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. 

எட்டு வழிச்சாலை விரிவாக்கம் என்ற பெயரில்விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க முயன்றதையும் எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களை ஒடுக்க தடியடி உட்பட பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு வழக்குகளும் தொடுக்கப்பட்டன.கூடங்குளத்தில் அணுஉலை விரிவாக்கத்தை எதிர்த்தும் போராடியவர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, அதிமுக அரசின்அடக்குமுறை தாண்டவத்தின் உச்சமாக அமைந்தது. எதிர்க்கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு வழக்குகளில் பிணைக்கப்பட்டனர்.ஜனநாயக உரிமைகள், அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டன.அரசை விமர்சித்த ஊடகவியலாளர்கள் மீதுஅவதூறு வழக்கு தொடுப்பதில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுக ஆனந்தம் அடைந்தது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம்ஏற்பட்டுள்ளநிலையில் முந்தைய ஆட்சியின் போது தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இந்த அணுகுமுறை தொடர வேண்டும்.

அதே நேரத்தில் கூட்டம் நடத்தவும், போராட்டங்கள் நடத்தவும் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிரான அனைத்து தடைகளும் தகர்க்கப்பட வேண்டும்.

;