headlines

img

பேச்சல்ல, செயலே தேவை...

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 130.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவுக்கு கிடைத்து விடும் என்றும்இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றும் ஒன்றிய அரசு, நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால் இதுவரை நாட்டில் எத்தனை கோடிப்பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தால் நமக்கு சோர்வே ஏற்படும். இதுவரை 26.54 கோடி பேருக்குத்தான் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையே வெறும் 5.64 கோடி பேர் தான். இந்த நிலையில்தான் மேற்கண்டவாறு ஒன்றிய பாஜக அரசுநிலைக்குழு கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதை கடந்தஅனைவருக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுவிடும் என்று ஒன்றிய அரசுகூறுவது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பதுஅதற்கே வெளிச்சம். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல், கல்வி வளாகங்களில் பிரதமரை பாராட்டி விளம்பரங்களை வைக்கச்சொல்லி பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் சுற்றறிக்கை விடச் செய்வார்கள். ஆனால் காரியத்தில் ஒன்றும் காட்டமாட்டார்கள்.

இவர்களின் தலைவரான மோடியோ ஊடகங்களின் விளம்பரங்களால் இமேஜை ஊதிப் பெருக்கியதால் பயனடைந்தவர் அல்லவா? அதனால் இத்தகைய வேலைகளில் அவரும் கவனம் செலுத்துவார். ஆனால் அந்த கவனத்தை தடுப்பூசி தயாரிப்பில், கொள்முதலில், செலுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தால் இதுவரை பாதிப்பேருக்கு 2 டோஸ்களும் செலுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதுபற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும். அவரது நண்பர்கள் அம்பானியும் அதானியும் தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சிறப்பிடம் பெற்று விடுகிறார்களே, அது போதாதா?இந்த ஆண்டின் ஆறு மாதங்கள் முடிந்த நிலையில் வெறும் 5.64 கோடி பேருக்கு மட்டுமே 2 டோஸ்களும் செலுத்தப்பட்டிருக்கிறது என்று கூறும் ஒன்றியஅரசு இன்னும் ஆறு மாதத்துக்குள் எப்படி அனைவருக்கும் செலுத்திட முடியும் என்று எண்ணுகிறது? இவர்களது நோக்கமெல்லாம் தடுப்பூசி செலுத்துவதும் நாட்டு மக்களை கொரோனா கொடூரத்திலிருந்து காப்பதும் அல்ல. அடுத்த ஆண்டு வரவிருக்கும் 5 மாநில தேர்தலுக்காக நடிப்பது தான்!

வரும் ஜூலை மாதம் வரை 51.6 கோடி தடுப்பூசிகையில் இருக்கும் என்று அரசு கூறியது. ஆனால் 34.6 கோடிக்குத் தான் கொள்முதல் ஆணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பருக்குள் 130.5 கோடி தடுப்பூசி எப்படி கைக்கு வந்து சேரும்? 2 தனியார் நிறுவனங்களையும் வெளிநாட்டு இறக்குமதியையும் வைத்து இந்தஇலக்கு முழுமையடைந்து விடுமா? தமிழகத்தின் செங்கற்பட்டு தடுப்பூசி நிறுவனம் உள்பட பொதுத்துறை நிறுவனங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல், மந்திரத்தால் வந்துவிடுமா? எத்தனை காலம் தான் இப்படி ஏமாற்றுவார்கள்? பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபட்டால்தான் மக்களை பெருந்தொற்றிலிருந்து காக்க முடியும்.

;