headlines

img

சொல்லும் செயலும் ஒன்றாயின் நன்று....

உலக தாய்மொழிகள் தினத்தையொட்டி இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மத்திய கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில் உரை நிகழ்த்தும் போது குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும் என்று கூறியிருப்பது மத்திய அரசில் உள்ளவர்கள் மனம் கொள்ளத்தக்கது. அத்துடன், தங்கள் வீடுகளில் அதிகம் பேசாத ஒரு மொழியின் வாயிலாக குழந்தைக்கு கல்வியை வழங்குவதால் ஆரம்பக் கற்றல் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று அவர்கூறியிருப்பது முற்றிலும் உண்மை. அடிப்படைக்கல்வியை தாய்மொழியில் கற்பிப்பதன் மூலம்குழந்தைகள் சுயமரியாதை ஊக்கவிக்கப்படுவதுடன் அவர்களது படைப்பாற்றலும் மேன்மையடையும் என்ற அவரது பேச்சு அறிவியல்ரீதியான சான்றுகள் உணர்த்தும் உண்மை. 

ஆயினும் அவரது உரையில் அடிப்படை கல்வியுடன் நிர்வாகம், நீதிமன்ற நடவடிக்கைகள் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆகிய துறைகள் தாய்மொழியில் இயங்குவதோடு அவரவர் வீடுகளிலும் மக்கள் தங்களது தாய்மொழிக்கு
உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஒரு அரசாங்கம் அவசியம் செய்யவேண்டிய செயல்களை நினைவுறுத்தும் வகையிலான அவரது பேச்சு சிறப்பானது என்றாலும் மத்திய அரசாங்கத்தினர் செயல்படுகிற விதம்அதற்கு நேர்மாறாக உள்ளதே அதை மாற்றுவதற்கு என்ன செய்வார்? 

நூற்றுக்கணக்கான மொழிகள் ஒருங்கிணைந்துள்ளதால் மொழி பன்முகத்தன்மை நமது பண்டைய கால நாகரிகத்தின் அடித்தளமாக விளங்குகிறது என்று கூறிய குடியரசு துணைத்தலைவர் நமது சமூக கலாச்சார அடையாளங்களுடன் முக்கிய இணைப்பாக தாய்மொழி செயல்படுகிறது. எனவே அவற்றை பாதுகாத்து ஊக்கப்படுத்தவேண்டும் என்பதை யாருக்காக கூறுகிறார். மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும்கேந்திரிய வித்யாலய பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இபள்ளிகளில் தாய்மொழியே பயிலாமல் தாய்மொழிவழியில் பயிலாமல் அடிப்படைக் கல்வி அமைந்துள்ளதே. இது குடியரசு துணைத் தலைவரின் கவனத்திற்கு வரவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதது போல் மறைக்கும் முயற்சியா? 

மாநிலங்கள் மற்றும் உள்ளூர்களில் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். சாமானிய மக்களுடன் அவர்களுக்கு புரியும் மொழியில்தகவல்களை பரிமாறினால் மட்டுமே ஆட்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவர்களையும் இணைக்க முடியும். மக்களின் மொழிதான் நிர்வாக மொழியாக இருக்க வேண்டும் என்று மென்மேலும் வலியுறுத்திக் கொண்டே போகிறார். ஆனால் சமையல் எரிவாயு பதிவு செய்வதில் கூட மாநில மொழியை அகற்றிவிட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் பதிவு செய்வதற்கான நடைமுறையை பாஜக ஆட்சி திணித்ததைஎன்னவென்று சொல்வது? மொழிகளின் பன்முகத் தன்மையை பற்றி பேசுவது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி என்று பிறர் மீது திணிப்பது மக்கள் ஒற்றுமைக்கு எதிரானதாக அல்லவா இருக்கிறது.

;