headlines

img

திருத்தப்பட வேண்டியதல்ல திரும்பப் பெற வேண்டியது....

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிகுடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்தீர்மானத்தின் மீது பேசுகையில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும் அப்போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும்கூறியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயத்தை முற்றாக கார்ப்பரேட் நிறுவனங்களின்கைகளில் ஒப்படைக்கும் சின்னஞ்சிறு விவசாயிகள் உள்பட அனைவரையும் முற்றாக  அவர்களின்அடிமையாக்கிவிடும் என்பதாலேயே இந்திய விவசாயிகள் நாடு முழுவதும் 75 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஒரே கோரிக்கை புதிய சட்டங்களை ரத்து செய்யவேண்டுமென்பதுதான். ஆனால் பிரதமரும்,அவரது சகாக்களும் அதை தவிர மற்ற விசயங்களாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் பிரதமர் பேசும்போது, வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைமுறை எதிர்காலத்திலும் தொடரும் என்றும், 80 கோடி மக்களுக்கு குறைந்த விலையில் நியாயவிலைக்கடைகள் மூலம் உணவுப் பொருட்களை வழங்குவதும் தொடரும் என்றும் உறுதியளித்திருக்கிறார். ஆனால் அதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் எதையும் செய்வதற்கு துரும்பைக் கூட அசைக்க மறுக்கிறார்.

அதுபற்றி விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், வெறும் உறுதி மொழியிலேயே நாட்டை வழி நடத்திவிட முடியாது. குறைந்த பட்சஆதரவு விலைக்கு சட்டம் தேவை. அதற்கான சட்டம் இயற்றுகிறோம் என ஒரு முறை கூட பிரதமர் மோடி கூற மறுக்கிறார் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.புதிய வேளாண் சட்டங்களில் ஒன்றான அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தில் ஏற்கெனவே இருந்த பொருட்கள் அனைத்துக்கும் விலக்கு கொண்டு வந்துவிட்டனர். அதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றை எவ்வளவுவேண்டுமானாலும் பதுக்கி வைத்துக் கொள்ளலாம். பின்னர் இஷ்டம் போல விலையை ஏற்றிக்கொள்ளலாம் என்கிற நிலைமையை உருவாக்கியிருக்கிறது அந்த சட்டம். அவ்வாறு செய்துவிட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்குவது எப்படி சாத்தியமாகும்? மோடியின் பேச்சுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள்.

புதிய வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு ஏதாவது ஆட்சேபங்கள் இருந்தால் அவை திருத்தப்படும் என்றும், சட்டத்தில் எங்காவது சில விதிகள் பலவீனமாக இருந்தால் அவை திருத்தி வலுவாக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். உண்மையில் மூன்று சட்டங்களுமே விவசாயத்தையும் பொதுமக்களையும் பாதிக்கக்கூடியவைகளாகவே உள்ளன. அதனாலேயே கொட்டும் மழையிலும், பனியிலும் ஊன் உறக்கமின்றி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. எனவேஇந்தச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டியவை அல்ல, முற்றாக திரும்பப் பெறப்பட வேண்டியவையாகும். அதுவே தீர்வு.

;