headlines

img

அளவில்லா ஆசை கெடும்....

பாஜகவிற்குத் தேர்தல் நிதி எந்தளவிற்குக்  குவிகிறதோ, அதே அளவிற்கு தில்லுமுல்லும் குவிந்தே அந்த கட்சியின் கஜானாவை நிறைக்கின்றன. இதனை  ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நிதி தொடர்பாக வெளிவரும் புள்ளி விபரங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

2014 ல் பாஜக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்று சட்டத்தினை மீறியதற்காக பாஜக குற்றவாளிக் கூண்டில் நின்றது. அப்போது தில்லி உயர் நீதிமன்றம்  பாஜக மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த மோடி அரசு 2017ல் அந்த விதியையே திருத்தி, கள்ள கூட்டிற்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில்தேர்தல் நிதி பத்திர முறையை நடைமுறைப்படுத்தியது.தற்போது ஜனநாயக சீர்திருத்த அமைப்பு 2019- 20 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நன்கொடைகளைக் குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டிருக்கிறது. அதில் பாஜகவின் தில்லு முல்லும் அம்பலமாகியிருக்கின்றது. தேசிய கட்சிகள் பெற்றிருக்கும் ஒட்டு மொத்த தேர்தல் நன்கொடையை விட 3 மடங்கு அதிகமாக  பாஜக ரூ. 785.77 கோடி பெற்றிருக்கிறது. 

இதில் பெரும்பகுதி அரசு மற்றும் கார்ப்பரேட்டின் கள்ள கூட்டிற்குக் கைமாறாகக் கிடைத்ததொகையாகும். கோவிட் பெருந்தொற்று காலத்தில் கூட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவு கார்ப்பரேட்களுக்கு  வரிச்சலுகையாக ரூ.1 லட்சம் கோடியை மோடி அரசு அள்ளிக்கொடுத்தது. மக்கள் செத்து மடிந்த போதும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல்   பாஜகவிற்குஅதிகமான நன்கொடை அளிக்கும் சீரம் நிறுவனத்திற்கே கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அரசுபொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டது. இந்த உள்ளடி  கணக்குகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பாஜகவின் நன்கொடை கணக்கைப் புரிந்து கொள்ள முடியும். 

மகாராஷ்டிரா அமராவதி மாநகராட்சியில் இருந்து பாஜகவின் கணக்கிற்கு ரூ.4.80 லட்சம் நன்கொடையாகச் சென்றிருக்கிறது. எதற்காக மாநகராட்சியின் பணம் நேரடியாக பாஜக வங்கிக் கணக்கிற்குச் செல்ல வேண்டும்? என்றால், பாஜகவோ அங்கிருக்கும் ஊழியர்கள்பாஜகவிற்கு அளித்த நன்கொடை என்கிறது.அப்படியென்றால் அங்கிருக்கும் ஊழியர்கள்நேரடியாக பாஜகவில் இயங்க அனுமதிக்கப்படுகிறார்களா ? என்ற கேள்வி எழுகிறது.மேயர் மற்றும் துணை மேயர் பதவி என்பது அரசு நிர்வாகத்தின் சார்பில் மக்களுக்கான பணிகளைச்  செய்வதற்குத்தான். மாறாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜகவிற்கு அரசு நிதியை மடைமாற்றம் செய்வதற்கு அல்ல. பாஜக பெற்ற நன்கொடையில் 570 காசோலைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாதவை. அதன் மூலம் வந்த தொகை மட்டும் ரூ. 149 கோடியே 87 லட்சம். அதிலும்  நன்கொடையாளர்கள் யார் என்றே விபரமே  தெரியவில்லை என்கிறது புள்ளி விபரங்கள். 

ஆக மொத்தம்  பாஜகவின் நிதி கணக்கில்  அரசின் அதிகாரத்தைக் கொண்டு  தட்டிப் பறித்தபணம் மட்டுமல்ல, கருப்புப் பணமும் கலந்தே குவிந்திருக்கிறது.

;