headlines

img

பசியமர்த்த பால் கேட்டால் பசுமாடு வாங்குறேன் என்பதா?

ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கொரோனாநோயாளிகள் 32 பேர் திங்களன்று உயிரிழந்துவிட்டனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுவது தினசரி செய்தியாக மாறிவிட்டது. பலியாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்படித்தான் உலக நாடுகளில் முதன்மையானதாக இந்தியாவை மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு.

கொரோனாவின் முதல் அலை வந்தபோது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுபோல இரண்டாவது அலையின் போது மேற்கு வங்கத்தைகைப்பற்றியே தீருவதென கங்கணம் கட்டிக் கொண்டு கொரோனா தடுப்பு விதிகளை துச்சமாய்மதித்து செயல்பட்டனர் மோடியும் அமித்ஷாவும், அவர்களின் பரிவாரங்களும்.அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட முடிந்த அவர்களால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான திட்டமிடநேரம் தான் ஏது? அதிகார வெறி கொண்ட பாசிச குணம் மனித நேயத்தை குழிதோண்டிப் புதைத்து விடுகிறது. அதன் விளைவைத் தான் நாடும் மக்களும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தில்லி முதல்வர், மகாராஷ்டிர முதல்வர் போன்றோர் தங்களது ஆக்சிஜன் தேவைகளை மத்திய அரசிடம் கூறியும் அதன் பால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான், பிச்சையெடுப்பீர்களோ, திருடுவீர்களோ ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்திட வேண்டுமென்று தில்லி உயர்நீதிமன்றம் இடித்துக் கூறியது. ஆயினும் மத்திய அரசுக்கும் அதன் சுகாதாரத் துறைக்கும் உறைக்கவேயில்லை.ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்பு சோகத்தை  உ.பி. யோகி அரசும் குஜராத் பாஜக அரசும் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. தற்போது கர்நாடக அரசும் அந்த வழியிலேயே இறப்புக்குக் காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டுமல்ல என்று மனசாட்சியின்றி மறுக்கிறது. ஆனாலும் கூட சீனா உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஆக்சிஜன் உள்ளிட்ட மருந்துப் பொருட்களை ஐந்து நாட்களாகியும் எடுத்துப் பயன்படுத்தாமல் உள்ளது மோடி அரசு.

ஆக்சிஜன் உற்பத்திக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த மோடி அரசு மறுக்கிறது. உதாரணமாக திருச்சி பெல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கான வாய்ப்புகளை தொடர்ந்து மறுதலிக்கிறது.  தடுப்பூசி தயாரிக்கவும், பொதுத்துறை ஆலைகளை பயன்படுத்த மறுக்கிறது.ஆனாலும் ஞாயிறன்று நைட்ரஜன் ஆலைகளை ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக மோடி கூறியுள்ளார். இது செயல்பாட்டுக்கு வர எத்தனை நாட்களோ? வந்தாலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யுமா?  பட்டினியால் துடித்து அழும்பச்சிளம் குழந்தையின் பசியமர்த்த பால் கேட்டால் பசுமாடு வாங்கி வரச் சொல்லியிருக்கிறேன் என்பது போல இருக்கிறது மோடி அரசின் இந்தசெயல்பாடு.

;