headlines

img

உழவர் துயர் நீக்க உதவிக்கரம் நீளட்டும்....

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழைபெய்ததன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில்இந்தாண்டு குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணைதிறக்கப்பட்டது. தொடர்ச்சியாக பெய்த மழையும் ஓரளவு கை கொடுத்த நிலையில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடந்தன. விளைச்சலும் நன்றாக இருந்ததால் விவசாயிகள் பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் பருவம் தப்பி ஜனவரி மாதத்தில் பெய்த பெரு மழை தொடர்ந்து இன்னல்களையும், இடர்ப்பாடுகளையுமே சந்தித்து வரும் விவசாயிகளுக்கு மற்றுமொரு பெருந்துயராக மாறியுள்ளது.கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை உள்பட பெரும்பாலான இடங்களில்90 சதவீத பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. 

காவிரி பாசனப்பகுதி மாவட்டங்கள் மட்டுமின்றி கொங்கு மண்டல மாவட்டங்களிலும் செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற வடமாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல் பயிர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் கடலை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிறு வகைகளும் பாழாகிவிட்டன. அறுவடைக்கு தயாராகயிருந்த நிலையில் பெய்த இந்த மழை விவசாயிகளுக்கு பெரும் துன்பத்தை இழைத்துள்ளது. கடன் வாங்கி சாகுபடி செய்த நிலையில் முதலுக்கே மோசம் என்று விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் சம்பா அறுவடைக்கு தயாராகயிருந்த நெற்கதிர்கள் சாய்ந்துதண்ணீரில் மூழ்கி நெல் அனைத்தும் முளைத்துவிட்டது. கால்நடைகளுக்கு வைக்கோல்கூட கிடைக்காது என விவசாயிகள் புலம்புகின்றனர். ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி நேரடியாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் ஏற்கெனவே அறுவடை செய்த நெல்லையும் விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து கணக்கெடுத்து வருவதாகவும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறுகின்றனர். முதல்வரும் சில இடங்களில் சேதத்தை பார்வையிட்டுள்ளார். ஆனால்அரசுத் தரப்பிலிருந்து உரிய நிவாரணம் கிடைக்குமா? என்ற பேரச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள சேதம் உடனடியாக எவ்வித தாமதமுமின்றி கணக்கெடுக்கப்பட வேண்டும். இயற்கைப் பேரிடரின்போது தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்தியில் உள்ள பாஜக கூட்டணிஅரசு ஒருபோதும் தந்ததில்லை. இப்போதாவது தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு தர வேண்டும்.தமிழக அரசை பொறுத்தவரை மழையினால் ஏற்பட்டுள்ள சேதத்தை முழுமையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவதற்கு முன்பு குறைந்தபட்சஇடைக்கால நிவாரணத்தை அறிவித்து வழங்கவேண்டும். இயற்கைப் பேரிடரால் விவசாயிகளுக்குஏற்பட்டுள்ள பேரிடரை மத்திய, மாநில அரசுகள் தீர்க்கவில்லை என்றால், விவசாயத்தின் மீதேஅவர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். 

;