headlines

img

தலைக்கேறும்  தனியார்மய பித்து....

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்புகளும் மிக முக்கியம். எனவே அந்த துறையை அவமதிக்கும் போக்கினைஇனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர்நரேந்திர மோடி பொங்கியிருக்கிறார். மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசும்போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றோமோ அதே அளவிற்குத் தனியார் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏன் என்றால் அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரியபங்களிப்பைத் தருகின்றன என்று அவர் கூறியிருக்கிறார். தனியார் துறையை மோடி பாராட்டுவதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படப்போவதில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்தியஅரசு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் அளந்துவிட்டுள்ளதைத் தான் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

நட்டத்தில் அல்ல நல்ல லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் திட்டமிட்டு அழிப்பது யார்? நாட்டில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு4ஜி அலைக்கற்றை உரிமம் வழங்க மறுப்பது யார்? நாட்டில் உயிர்காக்கும் தடுப்பூசிகளை உற்பத்திசெய்யும் பொதுத்துறை மருந்து நிறுவனங்களுக்கு போதிய ஆர்டர் தராமல் கொரோனா தடுப்பூசியைத் தனியார் நிறுவனங்களிடமிருந்து  மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. மக்களின் சேவையில் லாபநோக்கம் பாராமல் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களை அவமதிப்பது மோடியும் அவரது ஆட்சியும்தான்.

ரயில்வேயில் 17 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். தனியார்மய முயற்சிகளால் இன்று 13 லட்சம் பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இத்துறையில் மட்டும் 4 லட்சம் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை துவங்கி புதிய புதிய திட்டங்கள் என்ற பெயரில் அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியையும் மத்திய அரசு விட்டு வைக்கவில்லை.மோடி நாடாளுமன்றத்தில் தனியார் துறைக்கு வக்காலத்து   பேசிய அதேநாளில்தான்,   இருஅரசு பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடவும்  3 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்தகவுடா அறிவித்தார்.  இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்,  ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் ஆகியவையே அந்த இரு அரசு நிறுவனங்கள்.  இந்த இரு அரசுநிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும்  விஆர்எஸ் திட்டத்தில் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்புகிறது மத்திய அரசு.

 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்த்து வேலையின்மையை அதிகரித்து சமூக நீதிக்கு வேட்டுவைத்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு.  இந்த லட்சணத்தில் தனியார் துறையையாரும் திட்டக்கூடாதாம். அவர்களின் தடையற்றசுரண்டலுக்கு சலாம் போடவேண்டும் என்கிறாரா பிரதமர்? 

;