headlines

img

வெறுங்கை முழம் போடுமா?

இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைதாண்டியிருக்கிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரேநாளில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சமாக உயர்ந்திருக்கிறது. கொரோனாவிற்கு இதுவரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 177 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் செவ்வாயன்று உலக சுகாதாரத் தினத்தையொட்டி பிரதமர் மோடி  ‘’உலகத்தைஆரோக்கியமாக வைத்திருக்க இரவு பகலாக பாடுபடுபவர்களுக்கு நாம் நன்றியையும் ஊக்கத்தையும்மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். வெறும் நன்றியும் ஊக்கமும் மட்டுமே எல்லாவற்றையும் சரி செய்து விடுமா ? சுகாதாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?  அதனை  சரி செய்ய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்னஎன்பதை பிரதமர் பட்டியலிட்டிருக்க வேண்டாமா?எப்போதும் போல் வெறுங்கையில் முழம் போட்டிருக்கிறார்.

இந்த கொரோனா தொற்று  காலத்திலும் பலதலைப்பின் கீழ் உள்ள நிதிகளை சுகாதாரத்துறையின் கீழ் காண்பித்து அதிக நிதி ஒதுக்கியதாக பட்ஜெட்டில் ஏமாற்றியதை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. உலக நீரிழிவு நோயாளிகள் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்திலும், எச்ஐவி யால் நோயாளிகள் பட்டியலில்  3ஆம் இடத்திலும் இந்தியா இருக்கிறது. உலக காச நோயாளிகளில் 30 சதவிகிதம் இந்தியர்களாக இருக்கின்றனர். மனித ஆற்றலில் மொத்தமுள்ள 195 நாடுகளில் சூடானை விட பின்தங்கி 158ஆவது இடத்தில் இருக்கிறது.

உலக அளவில் சராசரியாக மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் சுகாதாரத்துறைக்கு 6 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 0.50 சகிவிகிதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. இதனால்  கிராமப்புறங்களில் 72 சதவிகித பேரும்,  நகர்ப்புறங்களில் 79 சதவிகிதம் பேரும் தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டிய சூழல்  நிலவுகிறது என தேசிய மாதிரி ஆய்வு கூறுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3.5 கோடி பேர் தனது வருமானத்தில் பெரும் பகுதி மருத்துவத்திற்காக செலவிடுவதால் வறுமையின் பிடியில்சிக்குகின்றனர்.

கொரோனாவை எதிர்த்து போராடும் ராணுவமாக இருக்கும் சுகாதார ஊழியர்களில் பெரும் பகுதியினர், குறைந்த ஊதியம் மற்றும் தற்காலிக பணியாளர்களாக இருக்கின்றனர். அவர்களின் வாழ்வு நலம் பெற எந்த உருப்படியான திட்டமும்இல்லை. கொரோனாவில் இருந்து மக்களை பெரும்பகுதி காப்பாற்றியிருப்பது பொது சுகாதாரத்துறையே ஆகும். ஆனால் அதன் கட்டமைப்பை வலுப்படுத்த எந்த உருப்படியான நடவடிக்கையும் இதுவரை இல்லை. மாறாக சுகாதாரத்திற்கான குறைந்தபட்ச நிதியையும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாரிச்சுருட்டும் வகையில் பல திட்டங்கள்தீட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. கொரோனாவின் 2 ஆவது அலை வேகமெடுத்திருக்கும் நிலையில், உடனே பொது சுகாதாரத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்திட வேண்டும். அதுவே கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் அரணாக அமையும். 

;