headlines

img

நுனி நாக்கில் அமுதமும்  அடி நாக்கிலே நஞ்சும்....

அறிவியல் என்ற பெயரில் நுனிநாக்கில் அமுதமும், அடி நாக்கில் நஞ்சும் கலந்த பாடத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது அறிவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
பல்கலைக்கழக மானியக்குழு ஒரு சுற்றறிக்கைஅனுப்பியிருக்கிறது. அதில் உள்நாட்டு பசு அறிவியல் தேர்வை எழுத மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான பாடத்திட்டம் மத்திய  பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியபசு ஆணையத்தின் (ராஷ்டிரிய காமதேனு ஆயோக்) மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

அதில்அறிவியலுக்கு புறம்பாக, மூடநம்பிக்கையையும் மதவெறியையும் திணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ்கும்பல் உருவாக்கியிருக்கும் இந்துத்துவ சூழ்ச்சியின் வலையும் லாவகமாக விரிந்திருக்கிறது.“மாட்டு சாணமும் அதன் கோமியமும் கொரோனா தொற்றிலிருந்து 800 பேரை குணப்படுத்தியிருக்கிறது; மாடுகள் கொல்லப்படுவதால் பூமி அதிர்வு ஏற்படுகிறது. போபால் விஷவாயு தாக்குதலின் போது மாட்டுச்சாணம் பூசப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை  மாட்டுச்சாணம் விஷவாயுவை முறியடித்து பாதுகாத்தது; மாட்டின் பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதில் தங்கத்தின் துகள்கள் கலந்திருக்கின்றன; மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருக்கும் 5 டிரில்லியன் பொருளாதாரத்தில் மாடு முக்கிய பங்காற்றும்; பசுவில் இருந்து கிடைக்கும் சாணம், கோமியம் உள்ளிட்ட 5 பொருட்கள் புனிதமானவை; இவைஇதயத்திற்கு மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரித்து,

வாத, பித்த. கப தோஷங்களை சமநிலைப்படுத்தும்.  எல்லா நோய்களையும் குணப்படுத்தும். பசுவின்சாணத்தில் செல்வம் அளிக்கக்கூடிய மகாலட்சுமிஉறைகிறாள்” என்றெல்லாம் தேர்விற்கான பாடத்தில்எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பசுவின் நிறத்திற்கேற்ப அதன் சாணத்தின் மருத்துவ குணமும் மாறுமாம். சொரியாசிஸ் முதல் பக்க வாதம் வரை அனைத்து வியாதிகளையும் இந்த சாணம் சரி செய்து விடும் என இருக்கிறது. இப்படி முற்றிலும் அறிவியலுக்கு விரோதமாக நடக்கும் அக்கிரமம் தேசத்திற்கே அவமானம் ஆகும். அந்த அவமானத்தை தேர்வாக எழுது சொல்வது அப்பட்டமான மதவெறி அரசியலில்  மாணவர்களை கழுத்தை பிடித்து திணிக்கும் செயலாகும். இது கடும் கண்டத்திற்குரியது. உடனே கைவிடப்பட வேண்டும். அதிலும் இந்த தேர்வை உலக அளவில்நடத்துகிறதாம். 24 நாடுகளிலிருந்து இந்த தேர்வில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் பால்வளத்தைமேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் மோடிதலைமையிலான பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் பசுவின் பேரில் அப்பட்டமான அரசியலை முன்வைத்து, சிறுபான்மையினரையும், தலித் மக்களையும்குறி வைத்து தனிமைப்படுத்த முற்படுகின்றன.இது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு  தலைகுனிவையே ஏற்படுத்தும். கல்விக்கு அழகே கசடறமொழிதல்தான். மாறாக கசடுகளை மட்டுமே கற்றல் அல்ல. மூடநம்பிக்கைகளை முன்நிறுத்தி  பின்வாசல் வழியாக  ‘மனுநீதியை’ முன்நிறுத்தும் முயற்சி நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். 

;