headlines

img

உலரும் உணவுத்தட்டுகளும் கொழுக்கும் கருப்புப் பண முதலைகளும்....

கொரோனா நோய்த்தொற்று மற்றும் தொடர்ச்சியான ஊரடங்கினால் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் அன்றாட வாழ்வாதாரத்தைக் கூட இழந்துஓட்டாண்டியாகிவிட்டனர். வறுமை, வேலை யின்மை போன்றவை அதிர்ச்சிதரத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 97சதவீத இந்தியர்கள் ஏழைகளாகிவிட்டனர் என்று இந்தியப்பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மறுபுறத்தில் சுவிஸ் வங்கிகளில் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பதுக்கியுள்ளகருப்புப் பணம் ஒரே ஆண்டில் 6,625 கோடி ரூபாயிலிருந்து 20,700 கோடியாக அதிகரித்துள்ளது.சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்திற்கு இந்தியர்களின் நிதி சேமிப்பு என்று ஊடகங்கள் புது நாமகரணம் சூட்டியுள்ளன. ஒன்றிய அரசின் அறிவிப்புகளிலும் அவ்வாறே கூறப்படுகிறது. ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியர்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது தொடர்பான விபரங்களை அளிக்குமாறு சுவிஸ் வங்கிகளை கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணமாக சேமித்து வைத்துள்ள தொகை கடந்த 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு பாதியாக குறைந்துள்ளது. எனினும் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட பணபரிவர்த்தனை காரணமாக சேமிப்புத் தொகை அதிகரித்திருக்கலாம் என்று விசாரிப்பதற்கு முன்பே ஒன்றிய அரசு தீர்ப்பு எழுதியுள்ளது. இந்த லட்சணத்தில் சுவிஸ் வங்கிகளிடமிருந்து விபரங்களை கேட்டு என்ன முடிவுக்கு இவர்கள் வருவார்கள் என்பது முன்னமே தெரிந்துவிட்டது.2014 தேர்தலின் போது சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் முழுமையாக மீட்கப்படும் என்றும் அந்தப் பணத்தை எடுத்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15லட்சம் செலுத்தப்படும் என்றும் நரேந்திர மோடி கூறினார். அவர் ஆட்சிக்கு வந்து ஏழாண்டு காலம் முடிந்துவிட்டது. ஆனால் இதுவரை சுவிஸ் வங்கியிலிருந்து நயா பைசா கருப்புப் பணம் கூட  மீட்கப்படவில்லை.

இந்தியர்களின் வங்கிக் கணக்கில் நயா பைசா கூட செலுத்தப்படவும் இல்லை.சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள கருப்பு பண விபரம் குறித்து இருநாட்டு அரசுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் விபரங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விபரத்தின்படி ரூ.320 கோடி அளவுக்கு இந்தியர்களின் பணம் கேட்பாரற்று சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக கூறப்பட்டது. மறுபுறத்தில் சுவிஸ் வங்கிகளில் இந்தியப் பணக்காரர்கள், ஊழல் மூலம் சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கருப்பு  பணமாக பதுக்குவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது. ஆனால் எதுவும்உருப்படியாக நடக்கவில்லை. ஒருபுறத்தில் கோடானுகோடி மக்கள் அன்றாட உணவுக்கே அவதிப்படும் நிலையில், ஒருசிலர் தங்கள் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவது தேசத் துரோகம் இல்லையா? கொடுந்தொற்று காலத்திலும் ஒருசிலர் கொள்ளையடிப்பது நிறுத்தப்படவே இல்லை என்பதையே இந்த விபரங்கள் காட்டு கின்றன.

;