headlines

img

இனியும் தாமதம் கூடாது....

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினிஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.  மற்ற மூவரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குத்தண்டனையை நிறைவேற்ற  நாள் குறிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை விலக்கக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதால் அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் மூன்று பேரின் தூக்குத் தண்டனைக்கு எட்டு வாரங்கள் தடை விதித்தது. இவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மூவரின் தூக்குத் தண்டனையைஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகோய், சி.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வுரத்து செய்து உத்தரவிட்டது. மூவர் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று  ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. எழுவர் விடுதலை தொடர்பாக  இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று  முதலமைச்சர் பழனிசாமி கூறியிருந்தார். ஆனால் இதில் முடிவெடுக்க தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறிவிட்ட ஆளுநர் குடியரசுத்தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக இப்போது கூறுகிறார்.

மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ, அந்தத் தண்டனையை நிறுத்தி வைக்கவோ, அல்லது குறைக்கவோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் படி, ஆளுநருக்கு அதிகாரம்இருக்கிறது. இருப்பினும் அதைப் பரிசீலிக்காமலும் மாநில அரசின் தீர்மானம் மீது எவ்வித முடிவும் எடுக்காமலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் இழுத்தடித்த செயல்  அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
அரசியல் சட்டப் பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்புக்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும், முடிவு எடுப்பதில் தேவையற்றகால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றுபலமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.  

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆயுள்தண்டனைக்குக்  காலம் வரையறுக்கப்படவில்லை. பொதுவாக 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுகிறார்கள். அப்படிப் பார்த்தாலும் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கும் மேலாகவே அனுபவித்து விட்டனர்.  எனவே தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று இனியும் தாமதிக்காமல் எழுவரையும் உடனே விடுதலை செய்யக்  குடியரசுத்தலைவர்  ஆளுநருக்குப் பரிந்துரைக்க வேண்டும்.   

;