headlines

img

லட்சத்தீவை அழிப்பதா?....

இந்திய தேசமே கொரோனா தொற்றால் நிலைகுலைந்திருக்கிறது.கொரோனாவால்  உயிரிழந்தோரை எரிக்கக் கூட இடமின்றி நதிக்கரையிலே புதைப்பதும், நதியிலே தூக்கி எரிவதும் அன்றாட நிகழ்வாக மாறியிருக்கிறது. மறுபுறம்தங்களின் வாழ்வாதாரத்தை காவு கேட்கும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் கடந்த 6 மாதங்களாக தொடர்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய மோடி அரசோ விவசாயிகளின் கூக்குரலுக்கும், எரியும்பிணங்களுக்கும் இடையே சென்ட்ரல் விஸ்டாவும்,சொகுசு பங்களாவும் கட்டி மகிழ்கிறது. 

இந்த படுபாதகம் போதாது என்று,  எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போல், தற்போது லட்சத்தீவையும்  குறிவைத்திருக்கிறது மோடி அரசு. ஏற்கனவே 370 வது சிறப்பு பிரிவை நீக்கி ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை சின்னா பின்னமாக்கியது. அதே போல் தற்போது  சிறப்பு சட்டங்களை கொண்டு வந்து லட்சத்தீவை நாசமாக்க முயன்று வருகிறது.லட்சத்தீவில் 96.58 சதவிகித மக்கள் இஸ்லாமியர்கள். மீதமுள்ள 3.42 சதவிகிதம் இந்துக்களும், கிறித்தவர்களும் வாழ்த்து வருகின்றனர். லட்சத்தீவு பெரும்பகுதி கேரள மாநிலத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. கேரள உயர்நீதிமன்றம்தான் லட்சத்தீவிற்கான உயர்நீதிமன்றமாகவும் இருந்து வருகிறது. இதுவரை யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய ஆட்சி பணியாளர்கள்தான் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.ஆனால் மோடி தனக்கு வேண்டிய ஆர்எஸ்எஸ்ஐ சேர்ந்த பிரஃபுல் கோடா பட்டேல் என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்க செய்திருக்கிறார்.

இந்த பட்டேல் மூலம் லட்சத்தீவில் உள்ளமக்களை அங்கிருந்து வெளியேற்றி கார்ப்பரேட்களின் கனவு உலகமாக  இந்த தீவை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய சட்டவரைவு ஒழுங்கு முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதன்படி சுரங்கம் மற்றும் நெடுஞ்சாலைக்கு தேவை என்று அந்த நிர்வாகம் கருதினால் அங்கிருக்கும் குடியிருப்புகளை அகற்றிமக்களை வெளியேற்ற முடியும். 32 சதுர கிலோமீட்டரே உள்ள தீவில் எதற்கு நெடுஞ்சாலை? அங்கே எதற்காக சுரங்கம் தோண்ட வேண்டும்? 

அங்கு வாழும் மக்கள் தங்களின் கலாச்சாரம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் இதுவரை மது விற்க, வாங்க மற்றும் உற்பத்தி செய்யதடை இருந்து வந்தது. ஆனால் புதிய சட்டம்மதுபுழக்கத்திற்கு அனுமதித்து, மாட்டிறைச்சியை தடை செய்திருக்கிறது. 2 குழந்தைகளுக்கு மேல்பெற்றால் உள்ளாட்சி தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் மோடியின் பிம்பமாக லட்சத்தீவில் இருக்கும் பிரஃபுல்படேலின் சர்வாதிகார நடவடிக்கையாகும்.  லட்சத்தீவு மக்களின் கலாச்சாரத்தையும், வாழ்வுமுறையையும் அழித்தொழித்து, ஒரே நாடு,ஒரேமோழி, ஒரே கலாச்சாரம் என்கிற இந்துத்துவ சித்தாந்தத்தை நிலைநிறுத்தும் முயற்சி ஆகும். இதனை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.இந்த சதிச் செயலுக்கு எதிராக அந்த மக்கள்போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அனைத்து பகுதி மக்களும் கரம் கோர்க்க  வேண்டும். 

;