headlines

img

சேவைக்குப் பரிசு சிர(றை)ச் சேதமா?

பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்ட செயல்பாட்டாளர் ஸ்டான்சுவாமி பாஜக அரசின் பாசிச பாணி நடவடிக்கையால் சிறையிலேயே சாகடிக்கப்பட்டுள்ளார். இது ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜகவின் மோடி ஆட்சியின் மற்றொருஅரசியல் படுகொலையாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

2014 ஆம் ஆண்டில் மோடி அரசு பதவியேற்றதிலிருந்தே ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் மதவெறி, கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகளுக்கு இடையூறாக இருப்பவர்களை எல்லாம் ஏதாவதுஒரு அற்ப காரணங்களைக் கூறி கைது செய்வதும் தேசவிரோதி என முத்திரை குத்துவதும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-யை ஏவிசிறையில் அடைப்பதும் அவர்களை ஜாமீனில்கூட வெளிவரவிடாமல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.ஜார்க்கண்ட் மாநிலத்தின் கனிம வளங்களையும் வன வளங்களையும் மோடி அரசின் கார்ப்பரேட் நண்பர்களின் நிறுவனங்கள் கொள்ளை கொள்ள எதிராக இருந்ததற்காகவே ஸ்டான்சுவாமி மகாராஷ்டிரா பாஜக அரசால் 2018ல் பீமா கோரேகான் வழக்கில் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி, 84 வயதான, பாரிசவாயு பாதிப்புக்குள்ளான அந்த முதியவரை உரியமருத்துவ சிகிச்சை, உதவிகள் ஏதும் செய்யாமலே, ஜாமீனில் விட மறுத்து சிறையிலேயே சாகடித்து விட்டனர் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள்.

அவரைப் போலவே கைது செய்யப்பட்ட கவிஞர் வரவரராவ் (81), ஆனந்த் டெல்டும்டே (70), எழுத்தாளர் வெர்னோன் கோன்சால்வே (68), பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா (67), பேரா. சோமாசென் (63), மனித உரிமை வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் (61) ஆகியோரும் இன்னும் ஜாமீன்வழங்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றனர். ஆட்சியாளர்களை எதிர்த்துக்  கருத்துக் கூறினாலே அவர்கள் மீது உபா சட்டம் பாய்வதும் பழிவாங்கப்படுவதும் பாஜக ஆட்சியாளர்களால் தொடர் கதையாகிவிட்டது. ஆயினும் அதற்கெதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அண்மையில் தில்லி மாணவர் சங்கத் தலைவர்கள் ஆயிஷேகோஷ் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். புதனன்று அவர்கள் உள்ளிட்ட மாணவர்கள் தில்லியில் ஸ்டான்சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள், ஆனால் வழக்கம் போல ஒன்றிய உள்துறை அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லி காவல்துறை தனது வன்முறை வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது. பெயர் பேட்ஜ் இல்லாத காவல்துறை சீருடை அணிந்தவர்கள் ஈடுபட்டிருப்பது முந்தையநிகழ்வுகளையே நினைவுபடுத்துகிறது.

ஆவேசமிக்க மக்கள் போராட்டங்களுக்கு முன் காவல்துறை மட்டுமல்ல, ராணுவமே வந்தாலும் அதனை அடக்குவது இயலாது.ஸ்டான்சுவாமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும், சிறையில் வாடும் பீமாகோரேகான் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட மற்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒன்றிய அரசு விடுதலை செய்திட வேண்டும். அது வரை போராட்டங்கள் தவிர்க்க இயலாததே!   

;