headlines

img

கொரோனாவும், கொள்ளையும்...

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை சுனாமி போல சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான உயிர்பலிகள். மருத்துவமனைகளில் வந்து குவியும் நோயாளிகளின் எண்ணிக்கை சமாளிக்க முடியாததாக மாறியிருக்கிறது. எனினும் தமிழகத்தில் அமைந்துள்ள வலுவான அரசு மருத்துவ கட்டமைப்பு காரணமாகஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. 

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசும், முதல்வர் உள்ளிட்டஅமைச்சர்களும் போர்க்கால அடிப்படையில் கொரோனா நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆக்சிஜன் தேவையை ஈடுகட்ட பல்வேறுமுயற்சிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் நோய்த் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலை வீரியமானதாகவும், உயிரை அதிகளவு பறிக்கக் கூடிய ஒன்றாகவும் மாறியுள்ளது. அரசு மருத்துவமனைகளால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியாததால் தனியார் மருத்துவமனைகளை பலர் நாடுகின்றனர்.

இந்த நெருக்கடியான காலத்தை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் அடிக்கும்கொள்ளை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோரின் செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்றுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் பல்வேறு பெயர்களில், எந்தவிதமான வெளிப்படைத் தன்மையுமின்றி பல தனியார் மருத்துவமனைகள் பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன.

இந்த பின்னணியில்தான் ஒரு சில தனியார்மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்துக்கு புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதல்வரின் கவனத்துக்கு வந்துள்ளதாகவும், இத்தகைய மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எச்சரித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை என்ற பெயரில் பல லட்ச ரூபாய் முன்கூட்டியே பல மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் கொரோனா அல்லாத பிற நோய்களுக்கும் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இது தனியார் மருத்துவமனை போலிரெம்டெசிவிர் மருந்தை விற்றதால் மருத்துவர்ஒருவர் பலியாகியுள்ளார். தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முறைகேடு குறித்து கண்காணிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். கட்டண வசூலில் வெளிப்படை தன்மையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.கொரோனா கிருமிகளை விட கொடிய தனியார் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 

;