headlines

img

வங்கத்தில் வகுப்புவாத  விஷம் கக்கும் பாஜக.....

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என வெறிகொண்டு அலைகிறது பாஜக. 9 கோடியே 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட அம்மாநிலத்தில் 3ல் ஒரு பங்கினர் இஸ்லாமியர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு மேற்குவங்கத்தை பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும்இடதுசாரி கட்சிகளும் ஆட்சி செய்துள்ளன. கெடுவாய்ப்பாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்துவருகிறது. இடதுசாரிகளைத் தோற்கடிக்கிறேன் என்ற பெயரில் பாஜகவுடன்  கூட்டுச் சேர்ந்த மம்தா, அக்கட்சியின் வளர்ச்சிக்குமறைமுகமாக உதவினார். இன்று அதற்கான விலையைக் கொடுத்து வருகிறார். 

மம்தா-பாஜக இடையே அதிகாரத்தை யார்கைப்பற்றுவது என்ற போட்டியில் அம்மாநிலத்தில் மதவாத அரசியல் தீவிரமடைந்துள்ளது. ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொம்பு சீவிவிடும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. இதனை மக்கள் ஒற்றுமை என்ற ஆயுதத்தைக் கொண்டு எதிர்கொள்ளாத  மம்தா, ஜெய் ஸ்ரீராம் என்று பாஜக முழங்கினால் ஜெய் காளி என்று முழங்குவோம் என்கிறார்.மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் கட்டமைத்துவைத்த மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தான் இவை. அதிகார வெறிகொண்டுஅலையும் இந்தக் கட்சிகள் சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயங்கவில்லை. மேற்கு வங்கத்தில்  பாஜகஆட்சிக்கு வந்தால் பசுவதை தடைச் சட்டம்கொண்டு வரப்படும் என்றும்  லவ் ஜிகாத் தடைசெய்யப்படும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிரட்டுகிறார்.

மேற்கு வங்கத்தில் உள்ள இஸ்லாமிய மக்களின் அன்றாட உணவில் மாட்டிறைச்சிக்கு முக்கிய இடம் உண்டு. பசுவதை என்ற பெயரில் மாட்டிறைச்சிக்குத் தடைவிதிப்பதன் மூலம் இந்து- இஸ்லாமியர் இடையே பகையை உருவாக்க பாஜக முயல்கிறது. காதல் திருமணங்கள் சாதி- மதமற்ற சமூகத்தை கட்டமைக்க உதவும் என்பதால்  பாஜக அதை  அனுமதிப்பதில்லை. இந்துபெண்களை இஸ்லாமிய ஆண்கள் திருமணம்செய்து கொள்ள முன்வந்தால் அதற்கு பாஜகவினர் லவ் ஜிகாத் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். வேலையின்மை, விலைவாசி, தொழில் வளர்ச்சி என எதைப்பற்றியும் இரு கட்சிகளும் தீவிரமாக விவாதிப்பதில்லை. மத்திய, மாநிலஅரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளால் மேற்கு வங்க மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை கேட்டு இளைஞர்கள் வீதியில்இறங்கிப் போராடினால் அவர்களைத் தடி கொண்டுதாக்குகிறது மம்தா அரசு. ஆனால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதக்களமாக இடதுசாரிக்கட்சிகள் மாற்றிவருகின்றன. இந்த விவாதம் தீவிரமடைந்தால் தங்களது இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால்  பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சியும் வேறு விஷயங்களை எழுப்பி மக்களைத்திசைத்திருப்பி வருகின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இவை அனைத்தையும் முறியடித்து மேற்கு வங்கம் எப்போதும் மதச்சார்பற்ற மாநிலம் என்பதை  உணர்த்தும் வகையில்  மக்களின் தீர்ப்புஅமையும் என்பது உறுதி.

;