headlines

img

உடையும் நீர்க்குமிழிகள்....

மோடி மாடல் பொருளாதாரம் என்ற பிம்பத்தின் நீர்க்குமிழிகள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. நாடு விடுதலைக்குப்பின்  வரலாறு காணாத அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.  கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின்மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த நிதியாண்டில் மைனஸ் 7.3 சதவிகிதம் என்ற அளவிற்கு குறைந்திருக்கிறது. 

ஆனால் நமது பிரதமர் மோடி வழக்கம் போல்,இந்தியா பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறது;  நாம் கண்டிப்பாக வளர்ச்சியை பெற்றுவிடுவோம்; இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது என்று பொய் நெல்லை குத்தி பொங்கல் வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு  மத்தியமோடி அரசின் நிதி, நிர்வாகத் திறமையின்மையும், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையுமே காரணம் ஆகும். சென்ற நிதியாண்டில் நாட்டின் 97 சதவிகித மக்களின் வருமானம் அதிகரிப்பதற்கு பதிலாக கடுமையாக குறைந்திருக்கிறது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் 29லட்சம் வேலை வாய்ப்புகளும், இந்தாண்டு இது வரை 17 லட்சம் வேலை வாய்ப்புகளும்  பறிபோயுள்ளன. வழக்கத்திற்கு மாறாக நகர்ப்புறங்களிலும் வேலையின்மை 18 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட வேலையிழப்பால், வாழவழியின்றி தங்களின் வாழ்நாள் சேமிப்பான  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை எடுத்து செலவிட்டு வருகின்றனர். இப்படி பிஎப் பணத்தை எடுப்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா கால  வேலையிழப்பால்  மட்டும்  71 லட்சத்திற்கும் மேற்பட்ட இபிஎப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.இந்த நெருக்கடியிலும் ஈவிரக்கமற்ற மோடி அரசு, பெட்ரோல், டீசல் மீது வரிமேல் வரி விதித்து 2020- 21ம் நிதியாண்டில் மட்டும் கூடுதலாக 1 லட்சத்து87 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியது. இதே காலத்தில் ரிசர்வ் வங்கிடமிருந்து 1 லட்சம் கோடி வரை உறிஞ்சியிருக்கிறது. ஆனால் இந்த நிதியெல்லாம் எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை. காரணம் கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்தோருக்கு நிவாரணமில்லை; தடுப்பூசி வாங்க பணம்தரவில்லை; அனைவருக்கும் இலவச சிகிச்சையும்இல்லை.

ஆனால் இதே காலத்தில் குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் மட்டும் 57 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இது பொருள் விற்பனை காரணமாக உயர்ந்தது அல்ல. மாறாகதொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளைப் பறித்து மடைமாற்றப்பட்டதால்  ஏற்பட்டதாகும். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் உலகில் அதிக சொத்து சேர்த்தவர்கள் பட்டியலில்மோடியின் நெருங்கிய கூட்டாளி அதானி முதலிடத்திலும், அம்பானி 13 வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் சுயசார்பை தகர்த்தெறியும் மோடியின் தறிகெட்ட தனியார்மயம், கூட்டுக்களவாணி முதலாளித்துவம், விவசாய விரோதக்கொள்கை உள்ளிட்டவற்றைத் தடுக்காவிட்டால் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து தேசமும், மக்களும் அழிவுப்பாதையில் தள்ளும் நிலை உருவாகும்.

;