headlines

img

பிரதமரின் அளப்பும்,  நாட்டு நடப்பும்...

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. அவர் பதவியேற்ற பொழுது ஊடகவியலாளர்கள் எப்போதுவேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்றுகூறியிருந்தார். ஆனால் அவர் ஊடகவியலாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்தே வந்துள்ளார். அதேபோல நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்று விவாதங்களுக்கு பதில் அளிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் மனதின் குரல் என்ற பெயரில், யாரும் கேள்வி கேட்க, விவாதிக்க வாய்ப்பில்லாத நிகழ்ச்சியில் தொடர்ந்துபேசி வருகிறார்.

ஞாயிறன்று மனதின் குரல் 77வது நிகழ்வில்பிரதமர் மோடி பேசியுள்ளார். அவரது வழக்கமானஉரைகளைப்போலவே சுய பெருமிதமும், உண்மையை மறைக்கிற வார்த்தை ஜாலங்களுமே இந்த உரையிலும் இடம் பெற்றுள்ளன. ஏழு ஆண்டு கால ஆட்சியில் சுத்தமான குடிநீர்,வீடு, மின்சாரம், சுகாதாரம் என அனைத்தும் கிடைத்து கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்று கொஞ்சம் கூட கூசாமல் பேசியுள்ளார். கொரோனா நோய்த் தொற்றினால் மட்டுமல்ல, தொடர்ச்சியான ஊரடங்கினாலும் கோடிக்கணக்கான இந்திய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, தொற்று பரவலால் உயிருக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்று மனதின் குரல் நிகழ்வில் பேசுவதற்கு முன் தன்னுடைய மனசாட்சியின் குரலை பிரதமர் கேட்டிருக்க வேண்டும். 

கொரோனா தொற்றின் முதலாவது அலையை தனது அரசு வெற்றிகரமாக சமாளித்தது என்று பிரதமர் மோடி திரும்பத் திரும்ப கூறியுள்ளார். ஆனால் இது உண்மையல்ல. இப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்தி, தனக்குத் தானே பாராட்டிதழ் வாசித்து மகிழ்ந்து தன்னுடைய துதிபாடிகள் மூலம் புகழாரம் சூட்டிக் கொண்டு பிரதமர் மோடிஇருந்த நிலையில்தான்; முதலாவது அலையை மத்திய அரசு முறையாக சமாளிக்க மறுத்ததால்தான் இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளதுஎன நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சர்வதேசஊடகங்கள் மோடி அரசின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. 

கொரோனா முதல் அலை முற்றாக முடிந்துவிட்டது என்று கூறி கும்பமேளாவுக்கு அனுமதி,பெரும் கூட்டத்தை கூட்டி தேர்தல் பிரச்சாரம் என பிரதமர் மோடி முற்றிலும் பொறுப்பற்ற வகையில்நடந்து கொண்டார். இந்த பின்னணியில் தடுப்பூசி,ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. உள்நாட்டில் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை இல்லை. இதனால்தான் இரண்டாவது அலைக்கு இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வந்துள்ளது.இப்போதும்கூட கொரோனா தொற்றை சமாளிக்கும் பெரும் பொறுப்பை மாநில அரசுகளிடமே மோடி அரசே தள்ளி விடுகிறது. மாநிலங்களுக்கு தேவையான நிதி உதவியையும் மக்களுக்குதேவையான நிவாரணங்களையும் போதுமான அளவு தர மறுக்கிறது. இந்த லட்சணத்தில் முதல்அலையை வென்றது போல இரண்டாவது அலையையும் வெல்வோம் என்று கூறுவது அடுத்தடுத்த அலைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

;