headlines

img

நடிப்புச் சுதேசிகள் நடுங்கத்தான் வேண்டும்...

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவையொட்டி எட்டையபுரத்தில் அவர் பிறந்த இல்லத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் மற்றும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்பாரதியார் பிறந்த மண்ணில் நிற்பதை நினைத்தால்எனது உள்ளம் நடுங்குகிறது என்று கூறியுள்ளார். 

இந்த நடுக்கம் இயல்பான ஒன்றே. ஏனென்றால் பாரதி முன்வைத்த அனைத்து கொள்கைகளுக்கும் நேர்மாறான திசையில்தான் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு நாட்டை நடத்திச் செல்கிறது.6 லட்சம் கோடி அளவுக்கு இந்திய நாட்டின் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தேசிய பணமயமாக்கல் என்ற பெயரில் விற்றுத்தீர்க்கப் போவதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாரதி பிறந்த மண்ணில் நின்ற போது அவர் பாடிய ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ?’ என்ற பாடல் ஒன்றிய அமைச்சரின் நினைவுக்கு வந்திருக்கக்கூடும். அதனால் அவருக்கு நடுக்கம் வந்திருக்கலாம். 

கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் ஓட்டியபோது, ‘வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்- அடி மேலைக் கடல் முழுதும் கப்பல்விடுவோம்’ என்று பாடினார் பாரதியார். ஆனால்இவரோ விமானம், ரயில், கப்பல் என ஒன்றுவிடாமல் அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார். இதை நினைத்து அமைச்சருக்கு நடுக்கம் வந்திருக்கலாம். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பெருமிதத்துடன் பாடியவர் பாரதி. ஆனால் நிர்மலா சீதாராமன் அங்கம் வகிக்கும் ஒன்றியஅரசு தமிழ் உள்ளிட்ட மொழிகளை தள்ளிவைத்து இந்தி, சமஸ்கிருத திணிப்பில் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அன்றைக்கு ‘செப்பு மொழி பதினெட்டுடையாள்’ என்று பாரதி பாடியதற்கும் மாறாக ஒன்றிய அரசு இரு மொழிகளின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மொழிகளின் சமத்துவத்திற்கு எதிர்த்திசையில் தங்களது அரசு செயல்படுவதால்அமைச்சருக்கு நடுக்கம் வந்திருக்கக் கூடும்.

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என பாடியவர் மகாகவி. ஆனால் மக்கள்ஒற்றுமையைச் சிதைத்து ஒற்றைப் பண்பாட்டை திணிக்கும் கூட்டத்துடன் இருப்பவர் ஒன்றிய அமைச்சர். பாரதி பாடிய பன்முகப் பண்பாட்டிற்கு எதிராக இருப்பதால் நடுக்கம் வந்திருக்கக்கூடும்.பெண்ணுரிமைக்காக பாடுபட்டவர் பாரதியார் என்றும் அமைச்சர் புகழ்ந்துரைத்துள்ளார். அதுஉண்மைதான். ஆனால் நாடு சுதந்திரம் பெற்றுஇத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு தர மறுக்கும் சனாதன கூட்டத்தின் பிரதிநிதிதான் ஒன்றிய அமைச்சர். இதைநினைத்தும் நடுக்கம் வந்திருக்கக்கூடும். பாரதியைகொண்டாடுவது என்பது அவருடைய பாடல்களைபாடுவது மட்டுமல்ல. அவரது பாடல்களின் உட்பொருளை உணர்வதும் ஆகும் என்பதை அமைச்சர் உணர வேண்டும்.

;