headlines

img

நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு...

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில ளிப்பதில்லை. அங்கு மக்களுக்காக அவர்களின் நலத்திட்டங்கள் தொடர்பாக எழுப்பப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும் இல்லை. ஆனால் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலும் தேர்தல் பொதுக்கூட்டங்களிலும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிடும் வள்ளலாக மிக தாராளமாகஉரையாற்றுவதில் பெரு விருப்பம் கொண்டுள்ளார் என்பது நாடறிந்தது.

இந்திய தேயிலையின் மதிப்பை குறைக்க சர்வதேச சதி நடப்பதாக அசாம் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். இந்திய தேயிலை தோட்டங்களில் உற்பத்தியாகும் தேயிலைக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதிப்படுத்த வேண்டியது தனது அரசின் கடமை என்பதைமறந்துவிட்டு மற்றவர்கள் மீது குறை கூறி திசை திருப்புகிறார். இது ஆர்எஸ்எஸ் குருகுலத்தில்பயின்றவர்களுக்கு கைவந்த கலையாகும்.அசாம் மாநிலத்தின் இரண்டு மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளுக்கு காணொலி வழியாக அடிக்கல் நாட்டியுள்ளார். ஏற்கெனவே தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி ஆண்டு பலவாகிவிட்டது. ஆயினும் கட்டுமான வேலை எதுவும் நடந்தபாடில்லை. ஆனால் அசாம் மாநில தேர்தலைமனதில் கொண்டு அங்கு இப்போது அடிக்கல்நாட்டி ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோலவே தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிதி உதவி வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னால் மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில தலைநகரத்துக்கு சென்று ரூ.224 கோடி உதவித்தொகையை வழங்கினார் என்பதும் அதைச் சேர்ந்ததே.. தேர்தல் வந்தாலே அந்த மாநில மக்கள்மீது மத்திய ஆட்சியாளர்களுக்கு பாசம் பொங்கிவழிவது வாடிக்கையாகிவிட்டது. அங்கு பேசிய பிரதமர், ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் கற்பிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி, ஒருதொழில்நுட்பக் கல்வி நிறுவனமாவது நிறுவப்படவேண்டும் என்பது எனது கனவு என்று பேசியிருக்கிறார். கல்வி என்பது அவரவர் தாய்மொழியில் அமைந்திருப்பதே மாணவர்களின் முழு திறமையையும் வெளிப்படுத்த உதவுவதாக அமையும். அது நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படும். 

ஆனால் பாஜக மத்திய அரசோ தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தாய்மொழி வழிக் கல்விக்கு எதிரானதாகவும் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் வகையிலும் அமைந்திருப்பது எதிர்கால இந்தியாவை உருவாக்கும் இளைய தலைமுறையை முடமாக்கும் செயல் என்பதை மறந்துவிட்டு தாய்மொழி கல்விக்கு ஆதரவானவர்கள் போல் பேசும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாபள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகளுக்கு கூட குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லாத வகையில் செய்துவிட்டு தாய்மொழி கல்வி பற்றிவீண்ஜம்பம் அடிப்பது யாரை ஏமாற்ற? அவரதுதேர்தல் காலப் பேச்சு நம்ப முடியாதது என்பதற்கு ஏற்கெனவே நிறைய உதாரணம் உள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

;