headlines

img

அம்பேத்கர் பெயர் அரசியல்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புகழ்பேசும் பலரும் தவறாமல் சொல்வது  அம்பேத்கருக்குப் பெற்றோரிட்ட பெயர் பீம்ராவ். அதன் சுருக்கம்தான் பீ.ஆர். “அம்பேத்கர்” என்பது அவருக்குப் பலவகையிலும் உதவிசெய்த பிராமண ஆசிரியரின் பெயர்.  அந்த நன்றியை மறக்காமல் பீம்ராவ் என்ற தனது பெயரோடு அம்பேத்கர் என்ற பெயரைப் பிற்சேர்க்கை ஆக்கிக்கொண்டார்.  இது அவ்வப்போது நாம் கேட்டுப்பழகிய சொல்லாடல். இதிலே பீம் ராவின் நன்றிமறவாமை என்ற உயர்குணம் வெளிப்படுத்தப்படுவதோடு பிராமணர்களில் சிலர் சாதி பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி அளித்திருக்கிறார்கள். பொருளுதவி செய்து  முன்னேற்றி யிருக்கிறார்கள் என்று பெருமை பேசுவதற்கும் பயன்படுத்தப்படு கிறது. இது உண்மைதானா? இதற்கு சான்றாவணங்கள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்திருக்கிறார் தலித் செயற்பாட்டா ளர் யாக்கன்.  அம்பேத்கர் பெயர் பற்றி பொதுவாக சொல்லப்படும் கருத்தினை அவரது வரலாற்றை எழுதியுள்ள சமகால ஆளுமை களான தனஞ்செய்கீர், டி.சி.அ`ஹிர், வசந்த் மூன் ஆகியோரும் அப்படியே  இதனைப் பதிவு செய்திருப்பது  குறித்து கவலைப்படு கிறார். ஆவண ஆதாரங்கள் இல்லாமல் பதிவு செய்திருப்பது பற்றியும் வியப்பு தெரிவிக்கிறார்.  பிற்சேர்ப்புப் பெயருக்கான ஆவண ஆதாரங்கள் தேடி யாக்கன் பயணிக்கிறார். மகாராஷ்ட்ர மாநிலம் சதாராவில் தற்போது ‘பிரதாப்சிங் உயர்நிலைப்பள்ளி’ என்று அழைக்கப்படு கின்ற அன்றைய அரசு உயர்நிலைப் பள்ளியில் பீம்ராவ் சேர்க்கப்படுகிறார். இதுநடந்தது 1900 ஆவது ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி . அதாவது பீம் ராவின் 9ஆவது வயதில். அப்போதே ஆவரது பெயர் 'பீவா ராம்ஜி ஆம்பேத்கர்' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஆவண ஆதாரத்தையும் யாக்கன் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.  இதுமட்டுமின்றி அமெரிக்காவில் தங்கிப் படிக்கும்போது லண்டன் நூலகம் செல்வதற்கு அனுமதி கோரி ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் சர்நேம் - துணைப்பெயர் என்ற இடத்தில் அம்பேத்கர் என்று குறிப்பிடுகிறார். சர்நேம் என்பது தந்தைவழிப் பெயராகவே இருக்கும். அதன்படி ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்பதிலும் அம்பேத்கர் என்ற பெயரையே குறிப்பிடுகிறார்.  இதுபோன்ற தகவல்களுக்கெல்லாம் ஆவண ஆதாரங்களைப் பல்வேறு இடங்களிலும் தேடி அவற்றின் நிழற்படங்களையும் நூலில் இணைத்திருப்பது சிறப்பு. இதன்மூலம் நூறாண்டுகாலப் புனைவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக யாக்கன் குறிப்பிட்டுள்ளார். பெயர் அரசியல் என்பது மனித உயர்வை  மேட்டுக்குடியினரோடு முடிச்சுப்போடுவதாகவே எல்லாக் காலத்திலும் இருந்துள்ளது. அதுதான் அம்பேத்கர் விஷயத்திலும் நடந்துள்ளது என்பதை இச்சிறுநூல் நிறுவுகிறது.  

 கழுவப்படும் பெயரழுக்கு( ஆய்வு நூல் )
 எழுதியவர்: யாக்கன் 
வெளியீடு: கலகம் வெளியீட்டகம் 
1/17, அப்பாவு தெரு, எல்லீசு சாலை
 சென்னை - 600 002
 பக்: 64   ரூ.50/-
தொ. பேசி: 044 - 42663840

 

;