headlines

img

அம்பேத்கர்: வீடு என்பது வாழ்வதற்கல்ல; புத்தகங்களுக்கு

1894 லிலிருந்து ஆங்கிலேய இராணு வத்தில் எப்படி தீண்டத்தகாத வர்கள் படிப்படியாக நீக்கப்பட்டனர் என்பது குறித்த அரசாணையையும் அதுபற்றி 1894 இல் எழுதப்பட்ட கமிஷன் அறிக்கையை யும் பாபாசாகேப் அம்பேத்கர் தேடிக்கொண்டி ருந்தார்.  இந்தியாவில் ஆங்கிலேய அரசை நிலைநிறுத்தும் பொருட்டு மகர்கள் செய்த தியாகங்களைக் கருத்தில் கொண்டு,  மீண்டும் தீண்டத்தகாதவர்களின் படையணிகளை ஆங்கிலேயர் எழுப்ப வேண்டும் என அவரது தந்தை, வைஸ்ராய்க்கு வலியுறுத்தி எழுதிய கடிதத்தில் மேற்கூறிய ஆவணங்கள் குறித்த தகவல் அவருக்குத் தெரிந்தன. 1915 லிருந்து இந்தியாவிலும் வெளி நாடுகளி லும் பல நூலகங்களிலும் இந்த அறிக்கை களைத் தேடிக்கொண்டிருந்தார்.  அவருக்கு கமிஷன் அறிக்கையும் ராணுவச் சட்ட நகலும் லண்டனில் இருந்த ஒரு பழைய புத்தக வியாபாரியான வில்லியமிடமிருந்து கிடைத்தது.  அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அதற்கு அவர் கொடுத்த விலை மூன்று நாள் உணவுப் பணம். அந்த அறிக்கைகளைப் படிக்கும்போது பசியும் தாகமும் மறந்து மூன்று நாட்கள் விரதம் இருந்து வெறும் தண்ணீர் அருந்தி வாழ்ந்தார். 

வீடு என்பது பாபாசாகேபுக்கு வாழ்வ தற்கான இடம் அல்ல.  அது புத்தகங்களுக்கான தாகும்.  இந்தியாவில் டாக்டர் அம்பேத்கரிடம்தான் மிகச் சிறந்த புத்தக சேகரிப்பு இருந்தது. அவரிடம் பலவகையான அரிய நூல்கள் இருந்தன.  அவர் ஒருமுறை கூறினார். “தற்போது கிடைக்காத பல புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன.  அவற்றை நான் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கி றேன்.  அவற்றில் சில 150லிருந்து 200 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி இருக்கிறேன்”. புத்தகங்களின் மீதான அவரது ஆழ்ந்த விருப்பம் ஒரு மாபெரும் ஈர்ப்பாக மாறிவிட்டிருந்தது. அது 1950 களின் துவக்க காலகட்டமாக இருக்கும்.  பம்பாய் மாதுங்காவில் டி.ஏ. தெலாங் எனும் நன்கறியப்பட்ட கல்வியாளர் காலமானார்.  அவரிடம் ஒரு சிறந்த நூலகம் இருந்தது.  அதைப் பாதுகாக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கூட பெரிதாகக் கவலைப்படவில்லை. அவர்களின் அண்டை வீட்டுக்காரரும் அவர் மீது பெரும் அபிமானம் கொண்டிருந்த வருமான ஆர்.கே.பிரபு, தெலாங்  விட்டுச்சென்ற நூல்களைப் பட்டிய லிட்டார்.  அந்த நூலகம் துண்டு துண்டாகி பழைய புத்தகக் கடையில் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க ஒரே வழி தான் இருப்பதாக அவர் நினைத்தார்.  டாக்டர் அம்பேத்கரை அந்த நூலகத்தை வாங்கிக் கொள்ள ஆர்வம் ஏற்படுத்துவதன் மூலம்தான் அது சாத்தியம் என்று அவர் எண்ணினார்.அதன்படி  அம்பேத்கரை அணுகியபோது அவர் என்ன விலை என்று கேட்டார். அவர்கள் ஒரு புத்தகத்திற்கு ஆறு ரூபாய் கேட்பதாக தெரிவிக்கப்பட்டது.  ஆனால் புத்தகத்தின் அளவு பக்கம் அதை எல்லாம் பார்க்காமல் சராசரியாக இரண்டு ரூபாய் தருவதாக அம்பேத்கர் ஒப்புக்கொண்டார். அதன்படி புத்தகங்கள் வாங்கப்பட்டு  மதிப்பு வாய்ந்த உடமையாக வாசிப்பிற்குப் பயன்படுவதாக சித்தார்த்தா கல்லூரியில்  சேர்க்கப்பட்டன . அம்பேத்கர் இந்த உதவியை செய்யாமலிருந்தால் தெலாங் பயன்படுத்திய நூலகம் துண்டு துண்டாக சிதறிப் போயிருக்கும்.  புத்தகம் படிப்பதும் எழுதுவதும் அவருக்குப் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவரது சர்வத்தையும் ஆகர்ஷித்து கொண்ட ஒரு பெரும் காதல் .அவரது புத்தகத் தொகுப்பு இந்த நாட்டிலேயே மிகப் பெரியதும் பரந்து விரிந்ததும் என்றால் மிகையில்லை. அவர் புத்தகங்கள் வாசிப்பதில்  அளவிலா களிப்பெய்தினார்.  எழுதுவதை மிக விரும்பினார்.  அவர் பெருவேட்கைப் படிப்பாளி.  டால்ஸ்டாயின் வாழ்க்கை, விக்டர் `ஹியூகோ  எழுதிய “லெஸ் மிசரபிள்”, ஹார்டியின் “ஃபார் ஃபரம் த மேட்டனிங் க்ரவுட்” ஆகியவை தாம்  படித்து அழுத  மூன்று புத்தகங்கள் என்று அவரே குறிப்பிடுகிறார் . 

டாக்டர் அம்பேத்கரின் பரந்துபட்ட ஆய்வறி வும்  நாட்டின் மிக மதிப்பு வாய்ந்த தனி நூலகத்தைக் கட்டியெழுப்ப அவர் செய்த தியாகங்களும் காட்டிய பக்தியும்தான் புத்தகங்களின் மீதான அவரது காதலுக்கு இணையானவையாக இருக்கக்கூடும்.  அவரது நூல்களுக்கான அதிக ராயல்டி பணத்தை அவர் எப்போதுமே மொத்தமாகவோ பகுதியாகவோ கையில் வாங்கியதில்லை. அவரது நூல்கள் அனைத்துமே பல பதிப்புகளைக் கண்ட வெற்றிகரமான நூல்கள். அவரது ராயல்டி பணம் முழுவதை யும் புத்தகங்கள் வாங்குவதற்கு செலவிட்டார். சில நேரங்களில் ராயல்டி தொகையை விட அதிகமாக நூல்களை வாங்கிப்  பிரச்சனை யில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.  அம்பேத்கர் மும்பைக்கு வந்திருக்கிறார் எனும் செய்தி தேக்கர்ஸ்  புத்தகத்துறையில் பரவுவதுதான் தாமதம்.  உதவியாளர்கள் அவர் ஆர்வம் கொண்டிருக்கும்  பலதுறைசார்ந்த பலவித நூல்களை,  நூல்களின் பட்டியலை சேகரிக்கத் தொடங்கி விடுவார்கள். அவர் புத்தகத்துறைக்கு  வந்து சேர்வதற்குள் மூன்று அல்லது நான்கு உயரமான புத்தக அடுக்குகள் அவரது சிறப்பு இருக்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும். தனது சாய்வு நாற்காலியில் புதைந்து உட்கார்ந்து கொண்டு அவர் புத்தகத்துறையின்  மேலாளர் கையில் கொடுக்கும் ஒவ்வொரு புத்தகத்தின் தலைப்பையும் வாசித்து “ஆம்”, “இல்லை” என தேர்ந்தெடுப்பார். ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் எல்லா “ஆம்”களும் அடுக்கி வைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று சிப்பந்திகள் அவற்றை அவரது காருக்குக் கொண்டு செல்வார்கள்.  ஒவ்வொரு முறை அவர் பம்பாய்க்கு வரும்போதும் தேக்கர்ஸ் நிறுவனம் வருவதும் இப்படிப் புத்தகம் வாங்குவதும் நடைபெறும். 

தேக்கர்ஸிலிருந்து அவர் இப்படி வாங்கிக் குவிக்கும் பெரும் எண்ணிக்கையிலான நூல்களைப் பார்த்து ஆச்சரியமடைந்து நான் ( யு.ஆர். ராவ் ) அவரிடம் கேட்டேன்:  “அன்புள்ள டாக்டர், நீங்கள் வாங்கும் இத்தனை புத்தகங்களையும் படிக்க உங்களுக்கு நேரம் எங்கே கிடைக்கிறது என நான் தெரிந்து கொள்ளலாமா?”  கண்ணாடியினூடே என்னை உற்றுப் பார்த்துவிட்டு “ படிப்பது என்றால் நீ எதைக் குறிப்பிடுகிறாய் ராவ் ?  அதைச் சொல் முதலில்” என்றார். கொஞ்சம் அதிர்வடைந்து நான் திக்கித்தடுமாறி “அதாவது ஒரு புத்தகத்தை வாசிப்பது அதன் பக்கங்களின் முதலில் இருந்து கடைசி வரை ஆழ்ந்து படித்து உள்வாங்கி செரிப்பது” என்றேன்.  டாக்டர் புன்னகைத்தார். அது எனது வாசிப்பு பாணி அல்ல. சில நூல்கள்தான் முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரை ஆழமான வாசிப்பைக்  கோருகின்றன. எனக்கு ஆர்வமிருக்கும் துறையில் ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தால் அதன் பின்னட்டைக் குறிப்பு,  முன்னுரை, உள்ளடக்கப் பட்டியல் எல்லாவற்றையும் வாசித்து எனக்குப்  புதிய கருத்துக்களையும் எண்ணங்களையும் எந்த பாகங்கள் தரும் என முடிவு செய்வேன். அப்புறம் நான் அந்த பாகங்களை மட்டும் வாசிப்பேன்.  மற்றவை நமக்குப் பரிச்சயமான பகுதிகளாக இருக்கும். குறித்த பகுதிகளை வாசித்தபின்  அந்நூலை நான் வாசித்து விட்டதாகக் கொள்ளலாம். 

இன்சைட் ஏசியா, இன்சைட் யூரோப் ஆகிய பிரபல நூல்களின் ஆசிரியர் ஜான் கந்த்தர்,  பாபாசாகேப் 1938 ல் அவரது ராஜக்ரிஹா இல்லத்தில் சந்தித்தார்.  அவர் பாபாசாகேபின் நூலகத்தில் அப்போது  8000 நூல்கள்  இருந்த தாகக்  குறிப்பிடுகிறார். அந்த எண்ணிக்கை அம்பேத்கரின் இறப்புக்கு முன் 35 ஆயிரமாக உயர்ந்திருந்தது . அவரது புத்தகச் சேகரிப்பு பொக்கிஷத்தை மாளவியா, ஜே. கே.பிர்லா ஆகியோர் மிக அதிக விலைக்கு வாங்கிக் கொள்ள அணுகினார்கள்.  ஆனால் அவர் அதை மறுத்து விட்டார். பின்பு அவர் தனது புத்தகங்கள் அனைத்தையும் மக்கள் கல்விக் கழகத்திற்கு மாணவர்களின் பயன்பாட்டுக்காக நன்கொடையாகக் கொடுத்து விட்டார். இறுதிக்காலத்தில் அம்பேத்கர் இப்படிக் கூறினார்: “நான் மிக ஏழ்மையில் இருக்கி றேன் .ஒரு வருடத்திற்கு என்னை பார்த்துக் கொள்ளும் அளவிற்குக்கூட நான் சேமித்து வைக்க வில்லை . எனது வயதான காலம் குறித்து எனக்கு கலக்கமாக இருக்கிறது.  எனது சொத்து எல்லாம் நான் சேகரித்து வைத்திருக்கும் நூல்களில் இருக்கிறது . நான் சம்பாதிப்பதெல்லாம் புத்தகங்களில் செல விட்டேன்.  எனது நூல்களுக்கு சுலபமாக ஐந்து லட்சம் ரூபாய் என்னால் பெற முடியும். ஆனால் நான் இவற்றை சித்தார்த்தா கல்லூரிக்கு நன்கொடையாக அளிப்பேன்”. வாழ்நாளில் பாதியை  வறுமையிலும் துன்பத்தி லும்  கழித்த அவர் இத்தகையதொரு பெரும் புத்தக சேகரிப்பை எப்படி கட்டியெழுப்பி இருப்பார் என்பது நமது கற்பனைக்குத்தான் வெளிச்சம்.  டாக்டர் அம்பேத்கர் 100 ரூபாய் சம்பாதித்தால் அதில் 50 ரூபாயை 200 ரூபாய் சம்பாதித்தால் அதில் நூறு ரூபாயைப் புத்தகங்களுக்கு செலவழிப்பார்.  புத்தகங்களுக்கு அடுத்தபடியாக அவர் எக்கச்சக்கமான பௌண்டெய்ன் பேனாக்களை அதுவும் பெரிய பெரிய பேனாக்களை வாங்கி வைத்துக் கொள்ளும் தணிக்க முடியாது வேட்கை கொண்டி ருந்தார். சாதாரண பேனாக்கள் அவருக்குப் போதாது.  அவரது பேனா மற்றும் பிற எழுது பொருள் தேவைகளை கவனித்துக் கொள்ளும் ஜான் என்பவர்,  எப்போதும், ஊரில் இருக்கும் பெரிய அளவிலான பேனாக்கள் அனைத்தை யும் திரட்டி வந்து வைத்து அவருக்கு ஒவ்வொன்றாகக் காட்டுவார்.  அங்கிருக்கும் விற்பனை அலமாரியின் மேல் நன்றாக சாய்ந்துகொண்டு  ஒவ்வொரு பேனாவாக எடுத்து எழுதும் குறிப்பேட்டில் பெரிதாக தனது கையொப்பத்தைப் போட்டுப் பார்ப்பார். இந்தப் பரிசோதனைகளின் முடிவில்,  தனக்குப் பிடித்த ஒரு அரை டஜன் பேனாக்களை எடுத்து தனது கோட்டின் பெரிய பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்வார். 

தகவல்கள் : “பாபாசாகேபின் அருகிருந்து” நூலிலிருந்து...

;