அடிமைச் சேவகமும் ஆபத்தில் அதிமுகவும்!
மதுரையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் திமுக இணைவு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை தமிழக அரசியலின் தற்போதைய எதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘நிதிஷ் குமார்’ போன்ற கதிதான் ஏற்படும் என்று அவர் விடுத்த எச்சரிக்கை, அதிமுக தொண்டர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று.
பீகாரில் நிதிஷ் குமாரை வைத்து அரசியல் ஆட்டம் நடத்திய பாஜக, இறுதியில் அவரை எப்படிக் கையறு நிலைக்குத் தள்ளியதோ, அதேபோல் அதிமுகவையும் பாஜக “இரத்தம் உறிஞ்சி” சிதைத்துவிடும் என்பதைத் தரவு களோடு முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவெறும் பீகாருக்கான உதாரணம் மட்டுமல்ல; மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியது, கர்நாடகாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிலைகுலையச் செய்தது எனப் பல்வேறு மாநிலங்களில் பாஜக நடத்திய அரசியல் நாடகங்களை முதல்வர் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். தன்னைத் தற்காத்துக் கொள்ள அதிமுக எனும் கட்சியையே பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டு ‘அடிமைச் சேவகம்’ செய்யும் எடப்பாடி பழனிசாமியின் போக்கு, திராவிடக் கொள்கைகளுக்கே எதிரானது. சுயமரியாதை உள்ள எவரும் இத்தகைய அடிமைத்தனத்தை ஏற்க முடியாது என்பதால்தான், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் திமுகவை நோக்கி வந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் அனைத்தும் இறுதியில் தங்களின் தனித்து வத்தை இழந்து, அந்தச் கட்சியாலேயே அழிக்கப்பட்ட வரலாற்றுப் பாடத்தை அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் நினைவூட்டியுள் ளார். நிழலுக்காக பாஜகவிடம் தஞ்சம் புகுந்துள்ள பழனிசாமி, விரைவில் மாற்றப்படு வார் அல்லது ஓரங்கட்டப்படுவார் என்பது அரசியல் நிதர்சனம். அதிமுகவின் இந்தச் சரிவுக்குக் காரணம், திராவிடப் பாதையிலிருந்து விலகி, சுயநலத்திற்காக சரணடைந்ததுதான். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங் களின் மூலம் மக்கள் நலனை திமுக முன்னி றுத்தும் வேளையில், அதிமுகவோ ‘தலைமையற்ற’ குழப்பத்தில் தத்தளிக்கிறது.
அதிமுக போன்ற ஒரு கட்சி, அதன் கொள்கை அடையாளங்களை இழந்து, பாஜகவின் தயவுக்காகக் காத்திருப்பது திராவிட இயக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒரு கட்சியாக நடத்தாமல், தனது அரசியல் பாதுகாப்பிற்கான ஒரு கேடயமாக மட்டுமே பயன்படுத்துகிறார் என்பதையும், அதன் விளைவாகத் தொண்டர்கள் கைவிடப் படுவதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இப்போதாவது உணர வேண்டும். தங்கள் இயக்கம் யாருடைய கையில் இருக்கிறது; அது யாருக்காகச் செயல்படுகிறது என்பதை.
