headlines

img

நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு

நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு 

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று கூறி அவர்கள் அனைவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். அத்துடன் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தொகையை குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையளிக்கும் நல்லதொரு தீர்ப்பு.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு பெண் துணிந்து பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் மூலம் இந்த பாலியல், சித்ரவதை, வன்கொடுமைச் சம்பவம் தமிழ் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தக் கொடுமையில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுகவின் நிர்வாகிகளில் ஒருவரான அருளானந்தம் என்பவரும் இருந்ததால் ஆரம்பம் முதலே காவல்துறை தயக்கம் காட்டியது. அப்போதைய துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனின் தலையீடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்ததால் குற்றவாளிகளை கைது செய்வது கூட மிக நீண்ட தாமதமானது.

இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் போராட்டங்களால் 16 மாத காலத்துக்குப் பிறகே குற்றவாளிகள் கைது படலம் முடிந்தது. அத்துடன் வழக்கை சிபிஐ விசாரிக்கவும் இந்த வழக்கில் தொடர்புடைய 48 பேரும் பிறழ்சாட்சிகளாக மாறாமல் சாட்சிய மளித்தது முக்கியமானதாகும். வாய்மொழி சாட்சி யங்களும் மின்னணு சாட்சியங்களும் வழக்குக்கு வலுவூட்டின. செல்போனில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்டெடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது சிறப்பான செயல்பாடாகும்.

ஆறு ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் கோவை  மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி வழங்கிய இந்தத் தீர்ப்பு பாராட்டுக்குரியதும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் எச்சரிக்கையாகவும் உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பும் பாராட்டத்தக்கவகையில் செயல்பட்டது. இந்த கொடுமை நிகழ்ந்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கூட குற்றவாளிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடும். அப்படிச் செய்தாலும் அங்கும் தமிழக அரசு வலுவாக வாதாடி அதை முறியடிக்க வேண்டும். உண்மையில் இந்த வழக்கில் பாராட்டுக்குரியவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள். அவர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். அப்போது தான் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் மனத்துணிவை பெண்கள் பெறுவார்கள்.