ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தின் குரல்வளையை முற்றாக அறுத்தெரியும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுடன் புத்தாண்டு பிறந்திருக்கிறது. யூனியன் பிரதேசமாக சுருக்கப் பட்டு ஒன்றிய அரசின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர், சமீப நாட்களில் துவங்கியுள்ள தொகுதி வரையறை மறுசீரமைப்பு கமிஷன் என்ற பெயரில் மிகப்பெரிய அளவிற்கு காஷ்மீர் மக்களின் இருப்பிடங்களையும் வாழ்வியலையும் சீர்குலைக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. அதற்கு எதிராக போராட்டம் பேரலையாக எழும் என்ற சூழலில், மாநிலத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் புத்தாண்டு முதல் வீட்டுச்சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஜம்மு-காஷ்மீருக்கு 370வது பிரிவின் கீழ் அளித்த சிறப்பு அந்தஸ்தை அராஜகமான முறையில் ரத்து செய்ததன் மூலம் அம்மாநிலத்தின் மீது கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட மோடி அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக காஷ்மீரை ஒரு திறந்தவெளி சிறைக்கூடமாக மாற்றியிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இரட்டை ஊரடங்கை அனுபவித்தார்கள். தொடர்ந்து அம்மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டே இருந்தார்கள். நாடு முழுவதும் மிகப்பெரும் ஆவேசக்குரல் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து சில மாதங்கள் அந்த நிலை தளர்த்தப்பட்டது என்ற போதிலும் மீண்டும் புதிய போராட்ட அலைகள் எழுவதை தடுக்கும் நோக்கத்துடன் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மத்தியக்குழு உறுப்பினரு மான குப்கர் கூட்டணியின் கன்வீனர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மோடி அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. வீட்டுச்சிறையை உடனடி யாக வாபஸ் பெற வேண்டும் என்ற குரல் பெரும் ஆவேசத்துடன் எழுந்துள்ளது.
போராட்டத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள அடக்குமுறை, தற்போது காஷ்மீரில் இன்னும் தீவிரமான போராட்டங்களை - ஒடுக்குமுறைக்கு எதிரான கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. 370வது பிரிவை மீண்டும் கொண்டுவர வேண்டும்; தொகுதி மறுசீரமைப்பு வரையறை என்ற பெயரில் பெருமளவு முஸ்லிம் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது என்ற சூழ்ச்சியை அனுமதிக்க முடியாது என்ற போர்க்குரல் ஸ்ரீநகரில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
அரசியலில் எதிரெதிர் துருவமாக இருந்தாலும் தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயக கட்சியும் இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் காஷ்மீரின் அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்தத் துவங்கியுள்ளன.
ஊரடங்குகள், ராணுவக் குவிப்பு என்ற எந்த அச்சுறுத்தலை ஏவினாலும் காஷ்மீரின் குரலை மோடி அரசால் நிரந்தரமாக ஒடுக்கிவிடமுடி யாது. ஏனென்றால் காஷ்மீரின் குரல், இந்திய தேசத்தின் குரல்.