games

img

நீச்சலில் சாதித்துக் காட்டிய சியாமளா...

“எந்தத் துறையாக இருந்தாலும் சாதனை படைப்பதற்கு வயதை காரணம் காட்டத் தேவையில்லை என்பதை அண்மையில் நிரூபித்திருக்கிறார் தெலுங்கானாவை சார்ந்த சியாமளா கோலி”.ராமேஸ்வரம் தீவையும் அதாவது தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிப்பது பாக். நீரிணை பகுதியாகும்.இந்த கடற் பகுதியை 67 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வல்வெட்டித் துறையைச் சார்ந்தநவரத்தினசாமி என்கிற தமிழர்தான் முதன் முதலாக 27 மணி நேரம் 8 நிமிடங்களில் நீந்திக் கடந்தது பெரும் சாதனையாக அமைந்தது.

அவரைத் தொடர்ந்து, அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவின் மிகிர்சென் 29 மணி 25 நிமிடங்களில் இந்த கடலை கடந்த கடந்துள்ளார். இந்த இருவரது சாதனையையும் தமிழகத்தின் குற்றாலீஸ்வரன் தனது 13 வயதில் 1994ஆம் ஆண்டு 16 மணி நேரத்தில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. பிறகு 2019 ஆம் ஆண்டில் தேனி மாவட்டம் அல்லிநகரம் ஜெய் ஜஸ்வந்த் என்கிற பத்து வயது பள்ளி மாணவன் இந்த கடல்பகுதியை முழுமையாக கடந்து இருக்கிறார். 

நாட்டிற்குப் பெருமை....
கடந்த ஆண்டில்  அமெரிக்காவின் எடி ஹூ என்கிற பெண், பாக் நீரினை கடற் பகுதியை கடந்தமுதல் வீராங்கனையாவார்.இந்த கடல் பகுதியில் பாறைகள், ஜெல்லி மீன்கள், ஆபத்தான கடல் பாம்புகள், உயிரினங்கள் வாழுகின்றன. அப்படிப்பட்ட பகுதியில்இடைவிடாமல் நீந்துவது அவ்வளவு சாதாரண மானது அல்ல.30 மீட்டர் நீளமுள்ள இந்த கடற்பகுதியை தனது 48வது வயதில் 13 மணிநேரம் 43 நிமிடங்கள் இடைவிடாமல் நீந்திச் சென்று குற்றாலீஸ்வரன் சாதனையை முறியடித்துள்ளார் சியாமளா கோலி.அதோடு மட்டுமின்றி, பாக் நீரினை கடற்பகுதியை கடந்த உலகின் இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையுடன் இந்தியாவின் முதல்பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தமானார்.தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்திச் செல்ல வேண்டும் என்ற கனவை நினைவாக்கியதும் அவரே!இத்தனைக்கும் இவர் நீச்சல் கற்றுக் கொண்டதே நான்காண்டுகளுக்கு முன்பு தான் என்பது வியப்புரிக்குரியது.  

விவசாயக் குடும்பம்...
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சியாமளா கோலி. தற்போது தெலுங்கானா மாவட்டத்தில் வசித்து வருகிறார். சிறுவயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டது கிடையாது.சமூகவியலில் முதுகலை பட்டம் முடித்ததும் அனிமேஷன் நிறுவனம் ஒன்றை துவக்கி பத்தாண்டு காலத்திற்கு மேலாக நடத்தி வந்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் 2டி அனிமேஷன் திரைப் படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படங்கள் குழந்தைகளுக்கானதும், நகைச் சுவை கொண்டதுமாகும். இடையில் திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

பிறகு தெலுங்கானாவில் ஒரு விளையாட்டு பயிற்சி மையத்தை துவக்கி அதன் மூலம்ஏராளமான மாணவர்களுக்கும் இளைஞர் களுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார்.தனது 44ஆவது வயதில் கோடைகால பயிற்சி முகாம் ஒன்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றிருக்கிறார். அதில் அதிகம் ஆர்வம் ஏற்பட தொடர்ந்து கவனம் செலுத்தி இருக்கிறார். அவரது சாதனைக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் திரிவேதி உதவியாக இருந்திருக்கிறார்.

விடாமுயற்சி...
பாக் நீரினை கடலை நீந்திக் கடப்பதற்கு கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அரசுகளிடம் அனுமதி பெற்றிருக்கிறார். ஆனாலும் கொடிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த திட்டத்தை தள்ளி போட்டுள்ளார். தினமும் 8 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்ட அவர், உள்ளூர் அளவில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று கொண்டாலும் 2019 ஆம் ஆண்டில் பாட்னாவில் திறந்தவெளி கங்கா நீரை 13 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார். இதுவே அவரது முதல் பயணம் ஆகும். அந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது.

இதற்கிடையில், தமிழகத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வைரஸ் பரவல் குறைந்ததை தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு முன்பு தெலுங்கானாவில் இருந்து ராமேஸ்வரம் வந்த அவர் சில நாட்கள் அங்கேயே பயிற்சி எடுத்தார். இங்க இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு சென்றார். அவருடன் அவரது பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் என 13 பேர் கொண்ட குழு 2 படகில் சென்றது.தலைமன்னார் கடற்படை முகாமில் சியாமளாவின் நீச்சல் பயணத்தை இலங்கை வடக்கு மாகாண சபைத் தலைவர் வேலுப்பிள்ளை கந்தையா சிவஞானம் கொடியசைத்து துவக்கி வைத்திருக்கிறார்.

இலங்கை, இந்திய அரசுகளின் கடற்படை மற்றும் கடலோர காவல்படை பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.10 மணி நேரத்தில் நீந்தி கடந்துவிட வேண்டும் என்ற திட்டமிட்டு களம் இறங்கினாலும் கடைசி ஐந்து மணி நேரம் மிகவும் கடினமாக இருந்துள்ளது.அதிக அலை,வலுவான நீரோட்டங்கள் அவரை பின்னுக்குத் தள்ளின. கூடுதல் ஆற்றலை செலுத்த வேண்டியிருந்தது, சவாலை முடிக்க மூன்று மணி நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது.இந்த சாதனை மிகவும் அற்புதமானது, ஏனென்றால் ஒரு விளையாட்டுப் பள்ளியை நடத்தி வரும் சியாமளாவுக்கு இது ஒரு சவால் நிறைந்த போட்டியாகும். இந்த முயற்சியை ஒரு “தனி சாகசம்” என்றும் வர்ணிக்கலாம்.இந்த சாதனை மூலம் பெண்களால் அனைத்து உயர்ந்த இலக்குகளையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையை அறிந்திருக்கிறார்.

தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு

;